topbella

Monday, March 26, 2012

எனை மீட்டுகின்ற உயிராய்...!சேமித்த நினைவெல்லாம்
சிற்பமாய் வடிவெடுக்க
வாதிட்ட நேரம் போக
வாழும் நேரம் எல்லாம்
வகையாய் உன்னோடு...

பாய்ந்தோடும் ஆறாய்
பாடல் மீட்டும் கருவியாய்
மீள முடியா சுழலாய்
எனை மீட்டுகின்ற உயிராய்...

எண்ணத்தில் உழன்ற
வண்ணக் கனவுகள்
எதிரேயே வந்து நின்று
கவிதை புனையச் செய்தே
கைகட்டிப் பார்ப்பதென்ன...

உணர்வுகளில் ஒளிந்திருந்த
ஓராயிரம் அசைவுகளும்
ஒரே நாளில் உயிர் பெற்றே
உன்னுடன் உறைந்ததென்ன...

நினைத்தே பார்க்கிறேன்
நிகழும் நிஜம் அனைத்தும்
கலையாத ஓவியமாய்
சிதறாத சித்திரமாய்
கருத்தில் வருவதென்ன...!

~அன்புடன் ஆனந்தி 
(படம்: கூகிள், நன்றி)

Wednesday, March 21, 2012

மௌனம் காத்தாவது...!விரும்பும் ஒருவர் 
விளையாட்டாய் செய்யும்
விஷயம் கூட
வினையில் கொண்டு
விட்டு விடுகிறதே..

வெறுப்பாய் பேசும்
வார்த்தைகளில் கூட
விண்மீனாய் தோன்றும்
உன் காதல் வேகம்..

சொல்லிப் புரிய வைக்க
சொற்கள் கிடைக்க வில்லை..
தெளிவு படுத்தவோ
தெரிந்த வார்த்தை கூட
உதவ வில்லை..

கோபத்தில் வரும் வேகத்தில்
கொதித்துத் தான் போகிறாய்..
கொண்டவன் கொந்தளிப்பில்
நிர்கதியாய் நிற்கும் நிலை..

மயக்கும் வார்த்தைகள்
பேசத் தெரியாது உனக்கு
மனதின் காதல்
மறைக்கத் தெரியாது எனக்கு..

மௌனம் காத்தாவது உன்
மன்னிப்பை கேட்கிறேன்..
கரையாத உன் கோபம் கூட
குறையாத என் அன்பில் தீரும்...!


~அன்புடன் ஆனந்தி 


(படம்:கூகிள், நன்றி)

Thursday, March 15, 2012

என் செய்வேன்...!எழுதாத கவிதை பல
ஏற்றி வைத்தேன் இதயத்திலே..
எழுத வைத்தவன் நீ
எட்டி நின்று என்ன வேடிக்கை?

எவரெவரோ என் வாழ்வில் 
எப்படியோ வந்து போக..
எதேச்சையாய் வந்தவன் போல்
என்னுயிரில் கரைந்து விட்டாய்..

எதார்த்தமாய் இருக்கத் தான்
எவ்வளவோ முயற்சிகள்
எங்கு சுற்றியும்..
என் கண் முன்னேயே
வந்து நிற்கும்
உன் நினைவு பட்சிகள்...

ஆழ்மனதில் ஆசை ஆயிரம்
எனை ஆள்பவன் நீ தரும் 
சோதனையோ கோபுரம்...

பார்க்கும் போதெல்லாம் சளைக்காமல்
பதிவு செய்த ஒலிநாடா போல்
பிறகு வேறென்ன என்கிறாய்...
என்னவென்று சொல்வேன்...

எதிர்பார்க்காதே என்றே
எத்தனையோ  முறை
எச்சரித்து விட்டேன்...
என் இதயம் கூட
என் பேச்சு கேட்காமல்
எதிர்த்தே நிற்கிறது
என் செய்வேன்.....!!!


~அன்புடன் ஆனந்தி

Tuesday, March 6, 2012

உருளைக் கிழங்கு போண்டா...!


தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு - 5
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் (பெரியது) - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:


  • உருளைக் கிழங்கையும், பட்டாணியையும் குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேறியதும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்க்கவும். 
  • கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி, வேக வைத்த உருளை கிழங்கு, பச்சை பட்டாணி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்து கொள்ளவும். (பஜ்ஜி மாவு போல)
  • ஆறிய உருளைக்கிழங்கு மசியலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, கரைத்த மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு, பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  • இந்த போண்டாவிற்கு தேங்காய் சட்னி, தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

~அன்புடன் ஆனந்தி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)