topbella

Tuesday, December 24, 2013

நட்பு...(நடப்பு)...!!!


ஆயிரம் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்லிக்கிறதுல.. பெருமை வேணா பட்டுக்கலாம்... ஆனா அதுல எத்தனை பேர் உங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா வந்து நிப்பாங்கன்னு யோசிக்கணும்... வயசு இருக்கும் போது.. வாலிபம் முறுக்கும் போது.. திமிரா அலைய தோணலாம்... அதுவே நாள் போகப்போக அதே நட்பு வட்டாரம் நம்மள சுத்தி இன்னமும் இருக்குதான்னு திரும்பிப்பார்த்தா.. அப்படி வெகு நாட்களா கூடவே இருக்கறவங்கள விரல் விட்டு எண்ணிறலாம்... 

ஏதோ சீசனுக்கு வர பறவைகள் மாதிரி.. ஒவ்வொரு கால கட்டத்துலயும் ஒவ்வொரு விதமான மக்களை நாம சந்திக்கிறோம்.. எண்ணங்கள் ஒத்துப் போயிருச்சுன்னா... உடனே அடிச்சு விழுந்து பழகி.. உயிர் நண்பர்கள்ன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியுறோம்.. எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம் உண்டு.. உயிர் நண்பன்னா என்ன?? அதுக்கு முதல்ல விளக்கம் கண்டு பிடிச்சிட்டு தான்.. உயிர் நண்பன் யாருன்னு முடிவு பண்ண முடியும்.

டெய்லி பத்து போன் கால், அடிக்கடி சந்திச்சு பேசிக்கிறது, ஒண்ணா எங்கயாச்சும் சேர்ந்து சுத்துறது... இப்படியெல்லாம் இருந்தாத்தான் அவங்க நமக்கு ப்ரண்டுன்னு ஒரு கண்டிஷன் இருந்தா... அப்படி ஒரு நட்பு தேவை தானான்னு யோசிக்க வைக்குது..

பெரும்பாலும் அடுத்தவங்கள இம்ப்ரெஸ் பண்ணியே... நம்ம வாழ்க்கை வீணா போயிட்டு இருக்குது.. ஒரு காலத்துல சனி, ஞாயிறுன்னா... ஐ ஜாலி விடுமுறைன்னு சந்தோசப் பட்டிருக்கோம்.. இப்போ எல்லாம்... சனி, ஞாயிறு வந்தாலே... ஐயோ.. வீக்கெண்ட்-ஆ ன்னு அலறுறோம்... விடிஞ்சா அடைஞ்சா ஆயிரத்தெட்டு கமிட்மென்ட்... அதிலும் வீக்கெண்ட் ஏன் வருது.. எப்போ வருதுன்னே தெரிய மாட்டேங்குது..

ஒவ்வொரு விடுமுறை நாளும் வரதுக்கு முன்னாடி... இந்த வாரம் எப்படி ரிலாக்ஸ் பண்ண போறேன் பாருன்னு.. பிளான் எல்லாம் பக்காவாத்தான் போடுவோம்... ஆனா நடக்க தான் மாட்டேங்குது... அதான் சொல்லுவாங்களே... ஓபன்னிங் எல்லாம்.. நல்லாத்தேன் இருக்கும்.. பினிஷிங் தான் சரியா இருக்காதுன்னு... அப்படி தான் ஆகி போவுது...!

விடுமுறை நாள்ல... மெல்ல எழுந்து.. விடிகாலை இயற்கையை ரசிச்சு... சூடா ஒரு கப் காப்பி குடிச்சிட்டு... நிதானமா குளிச்சு... காலை உணவு சாப்பிட்டுட்டு.. அப்படியே டிவி-ல எதாச்சும் ஒரு நிகழ்ச்சிய பார்த்துட்டு.... கொஞ்ச நேரம் பிடிச்ச எதாச்சும் ஒரு புத்தகத்தை படிச்சிட்டு... மதிய உணவையும் மகிழ்ச்சியா முடிச்சிட்டு... கொஞ்ச நேரம்... அப்படியே கண் அயர்ந்து படுத்துட்டு... சாயந்தரமா அப்படியே வெளில ஒரு நடை போயிட்டு வந்தா.... எப்படி ரிலாக்ஸ்-ஆ இருக்கும்... ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் கூட இப்பெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் போல....!

அடிப்படை புரிதல் இல்லாத எந்த ஒரு ஆர்ப்பாட்டமான விசயமும் நம் அமைதிக்கு நாமே அமைத்துக் கொள்ளும் முட்டுக்கட்டை தான்.. எதார்த்தம் இல்லாத எதுவுமே ரொம்ப நாளைக்கு எஞ்சி இருக்குறதில்ல... எப்போது நம் நேரத்தை செலவழிப்பது நம் கையில் இல்லையோ அப்போதே நம் மனம் நிம்மதி தொலைத்து அலைபாயத் தொடங்கிவிடுகிறது.

நட்பே வேண்டாம்னு நான் இங்கே வாதம் பண்ணல... எதுவுமே இங்கே நிரந்தரம் இல்ல.. அப்படி இருக்க எல்லாமே அளவோட இருத்தல் நல்லதுன்னு நினைக்கிறேன்...அவ்ளோ தான். எப்போ ஒருத்தங்க கிட்ட.. அடடா  கமிட் ஆயிட்டமே.. வேற என்ன பண்றது.. .போயிட்டு வந்திருவோம்ன்னு தோணிருச்சோ அப்பவே நம்ம சந்தோசம்... அமைதி அங்க இல்லாம போயிருது. 

முதல்ல.. நமக்கு நாம நட்பாகி நம்மள பத்தி புரிஞ்சு தெரிஞ்சுக்குவோம்... அப்புறம் மத்தது பத்தி யோசிக்கலாம்...!!!


...அன்புடன் ஆனந்தி 


(படம்: கூகிள், நன்றி)











Wednesday, October 23, 2013

நிழலாய்...!


ஏகாந்த வெளியில் நிதம்
எண்ணத்தை எழுத்தாக்கி
எதார்த்தத்தை கவிதை
செய்து வைத்தேன்...

படித்தே என்னுள் அதை
பதியம் செய்து வைத்தேன்..
உரமாய் உன் அன்பை
ஊற்றியும் வைத்தேன்..

கனவுகளில் களித்தாடி
கலவரம் செய்யும் உன்னை..
கைது செய்தே என்னுள்
கட்டியும் போட்டு விட்டேன்..

உணர்வுகளில் உறைந்தவனை
உள்ளத்தில் பூட்டி வைத்தே..
உள்ளார்ந்த அன்பினாலே
உயிருக்குள் புதைத்து வைத்தேன்...

நிஜத்தில் உன்னையே என்றும்
நிழலாய் சூழ்ந்திருப்பேன்...
நித்தமும் உன் நினைவில்
நீக்கமற நிறைந்திருப்பேன்...!


...அன்புடன் ஆனந்தி 




(படம்: நன்றி கூகிள்)

Tuesday, September 24, 2013

கத்தரிக்காய் காரக்குழம்பு...!


தேவையான பொருட்கள்:

அரைக்க:

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப)
மல்லி விதை - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

வதக்க: 

சின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1
தக்காளி - 1 (வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்)
கத்தரிக்காய் - 5 சிறியது (நீளவாக்கில் கீறி வைக்கவும்)

புளி கரைசல் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் கீறி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.
  • பின் அதே பாத்திரத்தில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து, கடுகு வெடித்ததும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
  • வெந்தயம் வாசம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து.. நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


...அன்புடன் ஆனந்தி 







Saturday, September 14, 2013

எதுவென்றேன்...!


இன்பம் எதுவென்றேன்
இனியவள் உன்னுடன்
இயைந்து இருப்பதென்றாய்..

துன்பம் எதுவென்றேன்
நீ இவ்வாறு தூர இருந்தே
என்னை துயரத்தில்
ஆழ்த்துவதென்றாய்...

காதல் எதுவென்றேன்
உன் கண்களோடு என்
கண்கள் கலப்பதென்றாய்...

காமம் எதுவென்றேன்
உனைக் கண்டவுடன் என்
கைகளுக்குள் சிறை
வைப்பதென்றாய்...

மோகம் எதுவென்றேன்
மூச்சிலும் பேச்சிலும்
முக்காலமும் நீயே
நிறைந்திருப்பதென்றாய்..

தேடல் எதுவென்றேன்
தெரிந்தும் என்னுயிரை
உனக்குள் தேடித்
திரிவதென்றாய்...!!!

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Tuesday, August 20, 2013

சூல் கொண்ட மங்கை...!


ஆதவன் அயர்ச்சியில் 
அப்புறத்தில் சென்று விட... 
பிள்ளைச் சிரிப்பாய் 
பிறை நிலா உந்தன் 
வெள்ளைத் தோற்றம்...

எவரோ உன்னை... 
எட்டிப் பார்ப்பதாய் எண்ணியோ 
வேகமாய் அங்குமிங்கும் 
வெட்கத்தில் மறைந்து திரிகிறாய்...

சூல் கொண்ட மங்கை போல்
சூழ்ந்திருக்கும் மேகக்கூட்டம்
கருத்தடர்ந்த பஞ்சுப்பொதியாய் 
விம்மி வெடித்து விட
விமரிசையாய் காத்திருப்பு...

மேல தாளம் போல் 
இடி மின்னல் இசை அமைக்க 
இக்கணமே வருகிறேன் என்றே
இழை இழையாய் வரைந்தபடி 
இப்பூமி முத்தமிட்டாய்...

கொட்டும் மழையில் 
குதித்து நனைந்திட தூண்டும் 
மழை உன்னைக் கொண்டாடியே  
மனம் நிறைந்திட வேண்டும்..!

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)






Tuesday, August 13, 2013

விடியல்...!



ஆதவன் அமர்க்களமாய் சஞ்சரிக்க
அங்கங்கே பறவைகள் இசையமைக்க
அவ்விசைக்கு ஏற்றாற்போல்
அத்தனை மரங்களும் தலையசைக்க...

தலையசைத்த நேரத்தில்
தளிர்காற்று எனைத் தாக்க
கண்மூடியே ஒரு நிமிடம்
கண்ணுக்கெட்டா தூரம் நான்
கடந்தே போக...

பள்ளி செல்லும் பாலகர்கள்
அலுவல் பார்க்கச் செல்லும் ஆசாமிகள்
அனைத்தையும் ஆமோதிப்பது போல்
ஆலய மணியின் அழைப்போசை...

கண்ணுக்கு விருந்தாய் விரிந்திருக்கும்
வண்ண வண்ணப் பூக்கள்
அன்னை மடி அசைவாய்
தென்னை ஓலையின் தாலாட்டு...

நெருக்கி அடுக்கி வைத்தது போல்
பளபளக்கும் பப்பாளிகள்...
பதுங்கிய படியே
பார்த்துச் செல்லும் தெரு நாய்கள்...

உச்சஸ்தாயியில் உரக்க கூவியே
உப்பு விற்கும் வியாபாரி...
கலகலப்பாய் கடை திறந்தே
காத்திருக்கும் கடை முதலாளி...

தக்காளி மிளகாய் விலையேற்றம் பற்றி
தர்க்கம் செய்து செல்லும் பெண்மணிகள்...
பார்த்தபடியே நின்றுவிட பல விஷயங்கள்
படர்ந்ததுவே பகல் பொழுதும்...!

...அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

Tuesday, July 16, 2013

மௌனத்தின் மொழி...!


விடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா... எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அறிவால் உணர்ந்தாய்... வைத்த அன்பில் அதை மறந்தாய்... வாழ்க்கை சுழலில் வந்தார் நிற்பதில்லை... சென்றார் மீண்டு வருவதில்லை..  அவரவர் கடமை முடிந்ததும்... கடைத்தேறி காணாமல் மறைந்து விடுகிறோம்.  எதுவும் இங்கே உண்மை இல்லை... எவர் உறவும் இங்கு நிதர்சனம் இல்லை.. கரை காணும் நோக்கம் உண்டாகில், கண் மூடி கடவுளிடம் சரண் அடைந்து விடு.. என்றே சத்தியம் உரைக்கின்றது.. அதைச் சபல உள்ளம் மறுக்கின்றது.

உண்மை அறிந்தும் உழலும் உள்ளத்தை என்ன செய்வது.. எதிலும் நாட்டம் இல்லை.. எதன் மீதும் பற்று இல்லை.. எல்லாம் பார்த்தாகி விட்டது.. இருந்து செய்ய போவது என்றே இங்கே எதுவும் இல்லை.. கர்மாவின் விளைவால் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். ஞானம் வந்து விட்டதாய் சொல்பவன் எல்லாம் ஞானி அல்லவே.. தனக்கு எல்லாம் தெரிந்து விட்டதாயும், அதை பிறர் உணர பிரயத்தனம் செய்வதாயும் சொல்லித் திரிபவர்கள்.. மூடர்கள்.  உணர்ந்த சத்தியத்தை உள்ளத்தோடு நிறுத்திக்கொள்... உலகிற்கு உணர்த்துவது உன் வேலை அல்ல.. 

கணத்திற்குள் காலம் உன்னை கடந்து கரைந்து சென்று விடுகிறது.. நினைத்தாலும் அதனை நீ எட்டிப் பிடிக்க இயலப்போவதில்லை.. உலகம் தெரிந்து கொள்.. உண்மை அறிந்து கொள்.. உனக்குள் அமிழ்ந்து கொள்... உள்ளமை உணர்ந்து கொள்... உனக்குள் உன்னை தேடுவதை தவிர உன்னதமான செயல் வேறொன்றும் இல்லை. உண்மை உணர்ந்த நிமிடம் நாம் ஊமையாகி விடுகிறோம்.. பேச ஒன்றும் இல்லை.. பெரிதாய் சொல்ல எதுவும் இல்லை.. மௌனத்தின் உன்னதம் மனதிற்கு உரைக்கும் தருணம் உள்ளுக்குள் அமைதி சூழ.. மற்றவை எல்லாம் மறைந்து விடக்கூடும்.

எண்ணத்தின் தெளிவு ஏகாந்தம் தரக்கூடும்... திணிக்கப்படாத சிந்தனை தூய தீபமாய் ஒளிரக்கூடும். போகும் இடம் தெரிந்து விட்டால்... வாழும் இடம் வசந்தமாகிப் போகும்... மௌனத்தின் மகிமை அறிந்தவர்.. அதை உணர்ந்தவர்.. அன்றாட நிகழ்வுகளின் இரைச்சலைக் கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. ஆழ்ந்த அமைதியின் அருமை உணர்ந்து விட்டால்... மற்றதெல்லாம் இங்கே மதிப்பிழந்து போய் விடுகிறது...!

மௌனம் மகத்துவமானது... மௌனித்தல் அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல... பல சந்தர்ப்பங்களில் சத்தியம் உணர்ந்தும்.. லௌகீக வாழ்வின் சாகசங்கள் நம்மை சடுகுடு ஆடத்தான் செய்து விடுகிறது.. உட்கார்ந்து யோசிக்க ஒன்றும் இல்லை.. உள்ளத்தின் ஓசைக்கு செவி மடுத்தே.. உண்மையின் பாதையில் ஊமையாய் நகர்தல் உத்தமம்...!

வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி.

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள் நன்றி)

Tuesday, July 9, 2013

மனதின் வலிகள்...!


உறவுகளின் உன்னதம்
உருக்குலைந்து நிற்க...
கனவுகளின் எல்லைகள் 
கரையுடைத்து கடக்க..

மாயைகள் சூழ்ந்த 
மனதின் வலிகள் 
மௌனமாய் தாக்க...
மகேசன் துணை நாடி 
மங்கை நான் நிற்கிறேன்..

இருந்தும் இல்லாததும் 
புரிந்தும் தெளியாததும் 
அறிந்தும் அறியாதது போல் 
அமைதியாய் நகர்கிறேன்...

ஆர்ப்பாட்டம் அன்பிற்கு 
அவசியம் இல்லை...
அவரவர் விதிப்படி 
ஆகவேண்டியது ஆகட்டும்...

உணர்விற்கு எல்லையில்லை 
உரிமைக்கு எல்லை உண்டாம்...
கடமைக்கு காவல் இல்லை
புலன்களுக்கு வேலி இல்லை...!

...அன்புடன் ஆனந்தி

(படம்: நன்றி கூகிள்)

Monday, July 8, 2013

பாலக் பன்னீர்...!


தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 கப்
கீரை - 3 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - சிறிது
பால் (அல்லது) க்ரீம் - சிறிதளவு

செய்முறை:

  • பன்னீரை சின்ன சின்ன துண்டுகளாக்கி, எண்ணையில் பொரித்து தனியே வைக்கவும்.
  • கீரையை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து, மிக்சியில் அரைத்து கொள்ளவும். (ரொம்பவும் மையாய் அரைக்க வேண்டியதில்லை)
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். (சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும்)
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளியும் நன்கு வெந்ததும்.. அதில் மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதில் அரைத்து வைத்த கீரையை சேர்த்து, அதில் தேவைக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
  • நன்கு கொதித்ததும், பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, அத்துடன் சிறிது பால் அல்லது க்ரீம் சேர்த்து இறக்கவும்.
...அன்புடன் ஆனந்தி 

Wednesday, July 3, 2013

விதைத்த விதைகள்...!


விதைத்த விதைகள்
வீண் போவதில்லை 
விளையும் துன்பம் எதுவும் 
விதியின் வினைப்பயன் 
மட்டுமே இல்லை..

கடந்து போகும் நேரம் எதுவும் 
கைக்கு எட்டுவது இல்லை 
கலைந்து போன உறவுகள் எளிதில் 
கை கூடுவதும் இல்லை..

மறைத்து வைத்த துன்பம் எல்லாம் 
மனதில் நிற்பதும் இல்லை 
மனதில் நின்ற எதுவும் 
மறைந்து போவதும் இல்லை..

வார்த்தைகள் தவறி விட்டால் 
வாழ்க்கையில் இன்பம் இல்லை 
வாய் பேசாது இருப்பதாலேயே 
வக்கற்றவன் ஆகி விடுவதுமில்லை..

தேடி வந்த சொந்தங்கள் 
தேக்கி வைத்த குமுறல்கள் 
தேளாய் கொட்டியும் 
நீ தேக்கி வைத்த 
பாசம் மறைவதில்லை..!

...அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

Thursday, May 16, 2013

கடந்து போகும் காலங்கள்...!


ஆசைகள் அடக்கி ஆண்டவனை ஆழ்மனதில் இருத்தி... அமைதியாய் அமர்ந்திருந்தால் அகிலமும் கைவசப் படும்.. நிறை குடம் என்றும் ததும்புவதில்லை... தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் எல்லாரிடத்தும் பறை சாற்றி... பெருமை பட்டுக்கொள்ளும் சுய சொறிதல்.. எங்கும் சூழ்ந்து விட்டது.  திறமை இருப்பவன்.. திமிராய் நடக்கிறான்... வகை இருப்பவன்.. வாழ்ந்தே காட்டுகிறான்... இங்கும் இல்லாது அங்கும் இல்லாது.. இடையில் கிடந்து.. தங்களுடன் இருப்பவர்களை இம்சை செய்பவர்களை என்னவென்று சொல்வது...?

இருந்தால் கொடு.. இல்லையென்றால்.. சும்மா இரு.  கொடுப்பவனை குற்றம் சொல்லாதே.. அதிலும் குறை காணாதே.. வழமையாய் வந்துவிட்ட விஷயம்.. வாய் கிழிய பேசுதல்... பேச்சு... இதில் தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.. சில நேரங்களில் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத எண்ணற்ற விடயங்கள்.. வாய் பேசாதிருக்கும் போது... வந்து விழுகிறது. நம்மில் பலருக்கு தன் வீட்டு விசயங்களை விட.. அடுத்தவர் விசயங்களை அறிந்து கொள்வதில் தான் ஆனந்தம் அதிகமாய் கிடைக்கிறது என்று எண்ணம்.

ஒரு விஷயம்.. யோசித்துப் பார்த்தால்.. அவனவனுக்கு இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கவே.. சந்தர்ப்பங்கள் சரியாய் வாய்ப்பதில்லை.. அப்படியே சந்தர்ப்பம் வாய்த்து அதைச் சரிவரச் செய்யினும்... பிரச்சினை என்னவோ பல நேரங்களில் தீர்ந்த பாடில்லை... இதில் அடுத்தவர் பிரச்சினைகளை அறிந்து என்ன செய்யப் போகிறோம்..? தெரிந்து என்ன நிறைந்து விடப் போகிறது.. இல்லை தெரியாவிடில் என்ன குறைந்து விடப் போகிறது... தேவையற்ற சுமை.. நம்மை கீழே தள்ளும் பழு... இப்படித் தேடிப் போய் பின்பு தெளிந்து விலகி.. தெய்வத்தின் துணை தேடி அலைவது உறுதி..!

யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்.. அவரவர் திறமைக்கு ஏற்பத்... தகுதி அடைகிறார்கள்.. இங்கும் ஆயிரெத்தெட்டு அரசியல்... ஒருவன் நல்ல நிலைமையில் இருந்தால்.. என்னென்ன செஞ்சு இந்த நிலைமைக்கு வந்தானோ.. என்று ஒரு சொல்.. அதுவே... பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும்.. அவனை சும்மா விடுவது இல்லை... அங்கேயும் ஒரு இலவச கருத்துக் கணிப்பு... என்ன பாவம் பண்ணானோ... பிச்சை எடுத்துட்டு இருக்கான் பாருன்னு.. பிச்சையும் எடுக்க கூடாது... பில் கேட்ஸ்சாவும் இருக்க கூடாதுன்னா... ஒரு  மனுஷன் என்ன தான் செய்யணும்ரீங்க...?!

மனம் ஒரு குரங்கு.. ஒரு இடத்தில் அமைதியாய் நம்மை இருக்க விடாது.. அந்த மனதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தான் நம் சுய கட்டுப்பாட்டின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. மனதை அடக்கினால் மகாதேவனை அடையும் மார்க்கம் தென்படும். மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது...? ஆர்வத்தின் அடிப்படையில் சில பல விடயங்கள் தம்மை அறியாது செய்து விட்டு பிறகு சிந்தித்துப் பார்க்கையில்... அவைகள் அவசியமே இல்லை என்று உணர்கையில்... மன அழுத்தம் ஏற்படுகிறது... நிம்மதி இழக்க நேரிடுகிறது... கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்தென்ன பலன்..? நமது சுயம் இழக்கச் செய்யும் செயல்களை விட்டு விலகுதல்.. நம் மன அமைதிக்கான ஆரம்பமாகலாம்... 

நமது செயல்களால், நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரையும் ஒருசேர நம்மால் திருப்தி அடையச் செய்ய முடியாது.. எதெது செய்தால்... யார் யார் மகிழ்வர் என்று கணக்கிட்டு செய்து செய்தே.. நம் காலங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒருவருக்கு சாதகம் தரக்கூடும் என்று நாம் செய்யும் செயல் மற்றவருக்கு பாதகமாய் ஆகி விட வாய்ப்புகள் அதிகம் உண்டு.  அவ்வாறிருக்க எக்காலம் நாம் எதைச் செய்து... எவரெவர் மகிழ்ச்சி அடைந்து... நாம் இக்காலம் கடக்கப் போகிறோம்...?

விடை தெரியாத வினாக்கள்... விமரிசையாய் கண் முன்னே..!



...அன்புடன் ஆனந்தி




(படம்: கூகிள், நன்றி)

Friday, May 10, 2013

கார முறுக்கு...!


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
சவர் க்ரீம் (sour cream) - 1/2 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
ஓமம் - பொடி செய்தது சிறிது
காயப்பொடி - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

  • ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, சவர் க்ரீம் (sour cream), மிளகாய்த்தூள், உப்பு, காயப்பொடி, ஓமம் பொடி சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாய் பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு, முள்முறுக்கு அச்சை முறுக்கு குழலில் போட்டு, அதில் மாவை வைத்து சூடான எண்ணெயில்  பிழிந்து, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.


~அன்புடன் ஆனந்தி



Tuesday, April 30, 2013

சிவம்....!


எல்லை மீறிய ஆனந்தம் அளிக்கக் கூடிய பிரம்மாண்டம் ஒன்றே... அது என் ஈசன் திருவடி.. அவனடி நாட ஆன்ம பலம் வேண்டும்.. இப்படித் தான் வழிபட வேண்டும் என்ற நியதிகள் தேவை இல்லை... நியமனங்கள் தேவை இல்லை... கட்டுக்கள் தேவை இல்லை.. கண் மூடி மெய் அடக்கி சரணாகதியாய் அவனிடம் வந்தால் சர்வமும் சாத்தியப்படும்.... 

மாய உலகமிது... உணர்வுகள் உதைக்கப்பட்டு... கனவுகள் கலைக்கப்பட்டு... கை நிறைய பணம் சேர்க்க மட்டுமே காத தூரம் ஓடும் ஜென்மங்கள்...! எதில் இருக்கிறது இன்பம்... பணம் பொருள் வீடு வாசல் வித விதமாய் சொத்துக்கள்... எல்லாம் சேர்த்து... அடுத்து என்ன செய்ய போகிறோம்... என்றதொரு பெரும் கேள்வி....? வாழ்க்கையை ரசிக்க வேண்டும்... அதன் வலிகளை அறிய வேண்டும்... வலிகளை உணர்ந்து.. ஊடுருவி... அது விடுத்து வெளி வர வேண்டும்.

ஒன்றிரண்டு விடயங்களில் உலகமே அடங்கி விடாது... உண்மையும் தெரிந்து விடாது.. கடந்து வந்த பாதைகளும்.. இனி நாம் கடக்கப் போகும் மீதியும்.. கடவுளுக்கே வெளிச்சம்.  அல்லது நம் கர்மாவின் உச்சம்.... சலசலப்பற்ற அமைதியான சூழலில்... சங்கீதம் கேட்பது போன்று வாழ்க்கை அமைய வேண்டும்.

சாக்கு போக்குகள் சொல்லிக் கொண்டு சாக்கடையில் உழல்வதால் சத்தியம் இதுவென்று அறிய சாத்தியம் குறைவே... அறிந்தது உணர்ந்து... உணர்ந்தது தெளிந்து.. தெளிந்ததை தாமதிக்காது தேடி செல்வதே உத்தமம். தனக்குள் அமிழ்ந்து தயக்கங்கள் தொலைத்து... அமைதி தேடி அமரவேண்டும்.  அதற்கு உதவும் த்யானம், கடை பிடிப்பது என்னவோ அவ்வளவு கடினம் அல்ல.. என்றாலும், அதற்கான நேரம் ஒதுக்குவது என்பதே எல்லோருக்கும் இயலாத காரியமாய் இருக்கிறது... 

உள்ளிழுக்கும் சுவாசம் உள்ளத்து அழுக்குகளை எல்லாம் துடைத்து வெளிக்கொணர்ந்தால் போல... சித்த சுத்தி கிடைக்கச் செய்வது... த்யான நிலையின் மையம்... த்யானம் செய்வது ஒரு வகையான பலம். நம் உள்ளம் மற்றும் உடலின் சக்தியனைத்தும் ஒருங்கிணைக்க நமக்கு கை கொடுக்கும் கேடயமே த்யானம்.

அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து.. ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து.. உள்வாங்கியதை முடிந்த வரையில் உள்ளுக்குள் நிறுத்தி... பிறகு சீராக வெளிவிடும் போது ஒரு புத்துணர்ச்சி வரத்தான் செய்கிறது.

ஆயிரம் அலுவல்களுக்கிடையில் நமக்கென காலம் ஒதுக்குவதில் என்ன தடை....? எதற்கும் ஒரு துவக்கம் வேண்டும்.. துவங்கப்பட்ட விடயத்திற்கு அதைத் தொடர்ந்து நடைமுறையில் வைக்கத் தூண்டுகோலும் வேண்டும்.. துவங்க முயற்சிப்போம்...!

~அன்புடன் ஆனந்தி

Saturday, April 6, 2013

பாகற்காய் பக்கோடா...!


தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 4
கடலை மாவு - 1/4 கப்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
கரம் மசால் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • பாகற்காயை நன்கு கழுவி ஈரம் போக துடைத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதில் கடலை மாவு, மிளகாய் வத்தல் பொடி, காயப் பொடி, கரம் மசால் பொடி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பிசிறிக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க அவசியம் இருக்காது, பாகற்காயில் உள்ள ஈரப்பதமே போதும். தேவை என்றால் லேசாக தெளித்துக் கொள்ளவும்).
  • ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாகற்காய்களை உதிர்த்து விட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

~அன்புடன் ஆனந்தி

Wednesday, March 20, 2013

வாழ்வே தவம்...!


வாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந்தத்தை உணர முடியும்.  எதற்கு இந்த ஓட்டம்... அப்படி நிற்காது ஓடி சம்பாதித்து என்னென்ன சாதித்து விட முடியும்... ஓட்டம் ஒரு நாள் நின்ற பின்.. நின்று நிதானமாய் திரும்பி பார்த்தால்.. நிதர்சனம் நம்மை சுடும்.  நினைத்ததெல்லாம் அடைந்தோமா? அடைந்ததெல்லாம் ரசித்தோமா? 

ஆர்ப்பாட்டம் இல்லாத காலை விடியலை எத்தனை பேர் கவலை மறந்து ரசித்து கண்டிருக்கிறோம்... இல்லை ஆதவன் அடங்கும் தருணம் அந்த அம்சத்தை எத்தனை பேர் ரசித்திருக்கிறோம்...? கண் விழிக்கும் போதே....அடடா நேரமாகி விட்டது.. என்று புலம்பியவாறே அடித்து பிடித்து ஆரம்பிக்கிறது காலை... இப்படி இயந்திரத்தனமான வாழ்வில் நாம் இழந்தது எத்தனை...எத்தனை.. எண்ணிலடங்கா....!

சின்ன சின்ன விஷயம் கூட உணர்ந்து, ரசித்து, உள்வாங்கி செய்ய நேரம் இல்லை. ஆவி பறக்கும் காலைக் காப்பியை அமர்ந்து ரசித்து பருகி ஆண்டுகள் ஆகி விட்டது.. செய்த உணவை சிறிது நேரம் அமர்ந்து உண்ண பொழுதில்லை.. சீக்கிரம் சீக்கிரம்... என்று ஓடி.. சிதறித் தான் போய் விட்டது.. சின்னச் சின்ன சந்தோசங்கள்...!

எழுத்து நடையில் செந்தமிழில் தான் எழுத வருகிறது... வாங்க பேச்சு நடைக்கு மாறி விடலாம்.. 

சரி இப்போ சொல்லுங்க.. காலை காப்பியை நீங்க ரசித்து அமர்ந்து குடித்து விட்டே.. அடுத்த வேலை பார்ப்பவரா... சபாஷ்.. நீங்கள் அதிர்ஷ்ட சாலி தான்.. அதுவே போட்ட காப்பியை பல தரம் மைக்ரோ ஓவனில் வச்சு சுட வச்சு.. மறந்து.. திரும்ப சுட வச்சு மறந்து... ஒரு வழியா காப்பி கதை முடிஞ்சு.. அடுத்து சாப்பாடு வந்தா... கோழி கொரிக்கிற மாதிரி.. வேக வேகமா என்ன உள்ள போகுதுன்னே தெரியாம எத்தனை பேர் சாப்பிடுறோம்...?? முதல்ல இந்த பழக்கத்தை மாத்தணும்... தனக்கென்று நேரம் ஒதுக்கி அந்த தனிமையை கூட ரசித்து வாழ தெரியணும்... 

"அட என்னங்க லைஃப்.. விடிஞ்சதும் தெரியல.. அடஞ்சதும் தெரியல.. பொங்க வேண்டியது.. திங்க வேண்டியது.. தூங்க வேண்டியது..." இப்படி எத்தனை பேர் சொல்லி இருக்கோம்? ஏன்.....? நமக்குன்னு நாம யோசிக்கிறதே இல்ல... ஒவ்வொரு கட்ட வாழ்க்கைலையும் யாருக்காச்சும் பொறுப்பா கடமை தவறாம வேலை செஞ்சிட்டு இருப்போம்... 

நான் ரசித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருது... ரெண்டு பிரண்ட்ஸ் பேசிக்கிறாங்க... ஒருத்தர் படுத்துகிட்டு கால் மேல கால் போட்டு ஆட்டிக்கிட்டே இருக்காரு.. அவர் கிட்ட. அடுத்தவர் கேக்குறாரு.. 
ஏண்டா.. உனக்கு எதைப் பத்தியும் கவலையே இல்லையா? ஏண்டா இப்டி இருக்க? 
ஏன்.. எப்படி இருக்கேன்? எதுக்கு கவலைப்படணும்?
ஹ்ம்ம்.. எதிர்காலம் பத்தி யோசிக்க மாட்டியா?
யோசிச்சு...?
சம்பாதிச்சு சேர்த்து....
சேர்த்து வச்சு...?
வீடு வாங்கலாம்....
வாங்கி?
கார் வாங்கலாம்?
அப்புறம்...?
வெளிநாடெல்லாம் சுத்தி பாக்கலாம்...
அப்புறம்...?
(இப்போ கேள்வி கேட்டவர் கொஞ்சம் கடுப்பாகி.... )
ம்ம்ம்...அப்புறம் என்னவா... பேங்க்ல நிறைய பணம், ஆசப்பட்டதெல்லாம் வாங்கிட்டா.. நம்ம பாட்டுக்கு ஹாயா... கால் மேல கால் போட்டு ஆட்டிட்டு இருக்கலாமே...?
(படுத்திருந்த நண்பர்... ஹா ஹா... சிரிச்சிட்டு)
அட நாயே... அத தானடா இப்போ பண்ணிட்டு இருக்கேன்..ன்னு.
(நண்பர் ஏக கடுப்பாகி எஸ்கேப் ஆய்ட்டாரு...)

அதுக்காக சும்மா படுத்துட்டு கால் மேல கால் போட்டுட்டு இருக்க சொல்லல... செய்ய வேண்டியத செய்யாம இருக்கறதும் கூட தப்பு தான்.. வாழ்க்கைய வாழணும்..... மிஷின் மாதிரி இல்லாம.. உயிரோட்டத்தோட இயல்பா இருக்கணும்... அவ்ளோ தாங்க...!

~அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

Thursday, February 28, 2013

உயிர்ப்பூ நான்...!



உனதருகில் இல்லாத 
நொடிகள் எல்லாம் 
முட்களாய் நெஞ்சத்தில் 
தைத்த விதம்
விவரிக்க எண்ணாமலே 
உன்னிடத்தில் 
விழியகல விவரித்தேன்..

பொறுத்திருந்து கேட்டே நீயும் 
பொறுமையாய் சொல்லிச் சென்றாய்..
நித்தம் நினைவுகளில் 
நிறைந்திருக்கும் நம் காதல் 
நீ சொல்லித் தானா 
நெஞ்சம் நிறைக்கப் போகிறது...

சொல்லாமல் பூட்டி 
வைத்த பூரணத்துவம் 
என்னைக் கேளாமல் 
நெஞ்சில் படரும் விதம் 
வார்த்தைக்குள் அடைத்து வைக்க 
வியாபாரம் அல்லவே என்றாய்...

புரிந்தும் புரியாதது போல் 
உள்ளம் தெரிந்தும்
தெரியாது போல்...
உள்ளடக்கிய உணர்வோடு 
உன்னுடன் இசைந்து நின்றேன்...

ஆதி முதல் அந்தம் வரை 
உன்னில் பாதியாய் 
பதிந்திருந்தேன்.....
உணர்ந்து உருகும் உள்ளம் 
உயிர்ப்பில் லயித்த எண்ணம்
உள்ளார்ந்த அமைதியில் 
ஒன்றும் இயம்பாதிருந்தேன்...

தெளிவின் உச்சத்தில் நீ 
தெரிந்தும் குழப்பத்தில் நான் 
அறிவினை உணர்வு வெல்ல 
அறிந்தும் அறியாச் 
சிறுமிபோல் ஆதாரமாய் 
உன்னை தொற்றி நின்றேன்...

தகிக்கும் கோபம் உன்னுள் 
அதை தணிக்கும் 
தாபம் என்னுள்...
நிறைந்து நிற்கும் 
நிதர்சனம் நீ....
உன்னுள் உறைந்து கிடக்கும் 
உயிர்ப்பூ நான்...!!

~அன்புடன் ஆனந்தி


(குறிப்பு: இந்த கவிதை Feb 2013, தென்றல் இதழில் வெளிவந்துள்ளது, நன்றி )

Friday, January 11, 2013

உண்மையான உறவு...!


நட்பாகட்டும், உறவாகட்டும்.... உண்மையான பந்தம் எது? இந்த கேள்வி நம்ம எல்லார் மனசிலயும் அடிக்கடி வந்து போறது சகஜம்... பார்த்த இடங்களில் புதிதாய் ஒருவரை சந்திக்கும் போது, மரியாதை நிமித்தம்.. நலம் விசாரிப்பு... அப்படியே அவங்களுக்கும் நமக்கும் விருப்பங்கள் ஒத்து போகும் பட்சத்தில் மேற்கொண்டு பேச்சு... பிறகு ஒருவருக்கொருவர் தொலை பேசி எண் பரிமாற்றம்... சில பல முறைகள் தொடர்பு கொண்டு பேசுவது.. இப்படியா சில நேரங்கள்ல நட்பு ஆரம்பிக்கும். ஒருவரால் அடுத்தவருக்கு எந்த கஷ்டமோ, தொந்திரவோ இல்லாது இருந்தா... இது தொடரும். 

சில நேரங்கள்ல.. ரெடி மேட்-ஆக நட்புகள் அமையும். அதென்ன ரெடி மேட் நட்பு...? அதாவது, கல்யாணம் பண்ணி புதிதாய் வரும் போது, கணவருக்கு நண்பர்களாய் இருப்பவர்கள், அவர்களின் மனைவிகள் அவங்க எல்லாம் நமக்கும் நண்பர்கள் ஆவாங்க. இப்படி அறிமுகம் ஆகிற அத்தனை பேர் கிட்டயும் நம்ம நெருங்கி பழகுறது இல்ல.. சில பேர் கிட்ட ரொம்ப நெருக்கமா உணர்வோம், மீதி பேர் கிட்ட நல்ல நட்பா இருப்போம். சில பேர்கிட்ட விதியேன்னு பழகிட்டு இருப்போம்.. சில நேரங்களில் எதுக்கு தேவை இல்லாம இந்த டென்ஷன் எல்லாம்னு.. யோசிக்க வைக்கிற மாதிரி நிகழ்வுகள் இருக்கும்.

"அடுத்தவர் மனம் நோகாமல் நடப்பது", "குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை", "ஊரோடு ஒத்து வாழ்"... இதெல்லாம் சுலபமா சொல்லி வச்சிட்டு போய்ட்டாங்க... இங்க அதை எல்லாம் பின்பற்றி அவஸ்தை படுறது எத்தனை பேரு? எவ்வளவோ பார்த்து பார்த்து, இவங்க தப்பா நினைச்சிர கூடாது, அவங்க தப்பா நினைச்சிர கூடாதுன்னு பல விஷயங்கள் செஞ்சு.. நம்ம ஆப்பு வாங்குறது தான் மிச்சம்.. அப்படி வாங்கியும் பல நேரங்களில்.. ஒதுங்க முடியாமல் மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கும்.

இல்ல தெரியாம தான் கேக்குறேன்.. ஒருத்தங்க நல்ல பழகினா, அவங்ககிட்ட உரிமை எடுத்துக்குறது சரி தான்.. அதுக்காக அளவுக்கு மீறி தனக்கு சாதகமா உரிமை எடுத்துக்கறது தான் சகிக்க முடியறதில்லை.. பல சமயம், சரி போனா போகுது போன்னு.. சொல்றத கேட்டுட்டு,  கேட்டத செஞ்சிட்டு போயிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.. யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் எதுக்கு...?? நல்ல நட்போ, உறவோ... மனசுக்கு நிம்மதி தரணும்... நினைவுகளை அசை போடும் சமயம் ஆனந்தம் தரக் கூடியதா இருக்கணும்... அத விட்டுட்டு... எப்பா சாமீ...... ஹ்ம்ம் ஹும்ம்... இந்த விளையாட்டுக்கு நா வரல... ஆள விடுங்கப்பான்னு சொல்ற மாதிரி இருக்கக்கூடாது.

நம்ம எல்லாருக்குமே நிறைய வாழ்க்கை அனுபவங்கள் இருக்கும்.. அமைதியா உக்கார்ந்து யோசிச்சு பார்க்கணும்... என்னென்ன பண்ணோம்... எது எதுக்காக பண்ணோம்... பண்ணது அவசியம்தானா... இது மாதிரி.. நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்ளணும். நட்பும்,  உறவும்  இந்த வாழ்க்கைல தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான்... அதே சமயம் எப்போ எது நமக்கு பிரச்சினைகளை கொண்டு வருதோ, மனநிம்மதியோட விளையாடுதோ.. அல்லது சுயசிந்தனையில் குறுக்கிடுறதோ அப்பவே அதை விடுத்து ஒதுங்கிறனும் .

எனக்கும் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்றது பெருசு இல்ல.. அவங்க நம்மை நாமாக சுய கௌரவத்துடன் வாழ விடுறாங்களான்னு யோசிக்கணும்...  எப்பவும் திடமான மனதில் ஸ்திரமான எண்ணங்களுடன் சுயமரியாதையுடன் தனித்துவத்துடன் இருக்கணும்.

சரி ஓகே.. விட்டா பேசிட்டே இருப்பேன்.. உங்களுக்கு அப்படி நல்ல நட்போ, உறவோ ஏற்கனவே இருந்தா.. ரொம்ப சந்தோசம்... இல்லன்னா.. இனியாவது அமைய வாழ்த்துக்கள். அட அமையலேன்னா கூட ஒரு பிரச்சினையும் இல்ல... நமக்கு நாமே நண்பன்...!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

Thursday, January 10, 2013

என்னுயிரில் சித்திரமாய்...!


எத்தனை யுகங்களாய் 
உனக்காய் காத்திருந்தேன் 
எல்லையில்லா கனவுகளில் 
எதிர்பார்த்தே பூத்திருந்தேன்...

உணர்ந்த நிமிடத்தில் 
உறைந்த தருணத்தில் 
உருவமற்ற நிலையில் 
உள்ளுக்குள் சிலிர்த்திருந்தேன்...

மென்மையான பெண்மைக்குள் 
மெல்லிசையாய் நீ வந்தாய் 
மெருகூட்டும் கலைஞனைப் போல் 
மீட்டியே எனை வென்றாய்....

புதிருக்குள் அடங்காத
புயல் காற்று நீயன்றோ...
என் கண்களுக்குள் 
கவிதை சொல்லும் 
கண்மணியும் நீயன்றோ...

எழுதாத வரிகளெல்லாம் 
என்னுள்ளே பத்திரமாய் 
எழுதி வைத்தேன் உன்னுருவை 
என்னுயிரில் சித்திரமாய்...!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)


Thursday, January 3, 2013

மோர் குழம்பு...!


தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் - 2 கப்
வெண்டைக்காய் - 20
பெருங்காயப் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க:
தேங்காய் - 1/2 கப் துருவியது
பச்சை மிளகாய் - 10 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
  • தயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்து கடைந்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
  • வெண்டைக்காயை கழுவி, தண்ணீர் போக துடைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
  • அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • அதனுடன் (தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தூள், இஞ்சி) அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதக்கவும்.
  • இத்துடன் கடைந்து வைத்த மோரை சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.  நுரை பொங்கி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
(வெண்டைக்காய்க்கு பதில், வறுத்த சுண்டைக்காய் வற்றல், வேகவைத்த தடியங்காய் (வெள்ளைப் பூசணி), பக்கோடா சேர்த்தும் செய்யலாம்)


~அன்புடன் ஆனந்தி


About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)