topbella

Friday, December 17, 2010

எங்கள் வீடு....!!



ஆறு அறைகள் கொண்ட
அம்சமான மாளிகை....
என் அப்பா தன் அன்னையின்
பெயரில் கட்டிய அன்பு ஆலயம்...

குருவிகளாய் நால்வர் நாங்கள் 
கும்மாளமிட்டு கூடி வாழ்ந்த இடம்...
இளம் பச்சை நிறத்தில்
வெளி வண்ணப் பூச்சும்
அடர் அரக்கு நிறத்தில் அதன்   மேல்
அழகாய் எழுத்துக்களும்...

வெளியில் நின்று பார்த்தாலே
வெகுவாய் கவரும் தென்னை மரங்களும்
உள்ளே நுழைந்ததும்
உபசரிக்கும் அழகு ரோஜாக்களும்
நெஞ்சை அள்ளும் டிசம்பர் பூக்களும்
கூட்டமாய் கூடி நிற்கும்
குரோட்டன்ஸ் செடிகளும்...

அப்படியே உள்ளே வந்தால்
அங்குமிங்கும் கனகாம்பரமும்..
அழகழகாய் பூத்திருக்கும்
அடுக்குச் செம்பருத்திப் பூக்களும்...

பாத்திகளில் பாங்காய் சிரிக்கும்
கீரை வகைகளும்...
பக்கத்திலேயே வளர்ந்து நிற்கும்
பப்பாளி  மரமும்....

கொத்து கொத்தாய் காய்த்திருக்கும்
கொய்யா மரமும்....
சிரித்தாற்போல் சித்திரமாய்
சீத்தாப்பழ மரமும்...

அணில் வந்து கடிக்காமலிருக்க
அங்கங்கே அப்பா கட்டி வைத்த
ஆவின் பால் பாலிதீன் பைகளும்...

அதை தாண்டி இப்புறம் வந்தால்
அழகான துளசி மாடமும்...
அதற்குள்ளே அம்சமாய் ஒரு
அகல் விளக்கும்...

இத்தனை தவிரவும்
இதர  பல செடி, கொடிகளுடன்
இயற்கையுடன் ஒன்றி
இன்பமாய் வாழ்ந்த வீடு
எங்கள் வீடு....!!


இது அத்தனையும் எங்கள் வீட்டில் உண்டு... அதெல்லாம் இப்போ ரொம்ப மிஸ் பண்றேன்..... அம்மா, அப்பா, உடன் பிறந்தோர், சொந்த பந்தம் மட்டும் இல்லாம நம்ம வாழ்ந்த வீடும் நமது வாழ்வின் அங்கமாகவே மாறி விடுவது.... உண்மைதானே...!!


பகிர்வைப் படித்ததற்கு நன்றிகள் பல...!!


(பி. கு.:  இந்த மஞ்சள் செம்பருத்தி எங்கள் வீட்டில் பூத்த மலர்....!! )

...அன்புடன் ஆனந்தி

Wednesday, December 8, 2010

காரக் குழம்பு....!!


தேவையான பொருட்கள்:

வெங்காயம் - பெரிது 1              
தக்காளி - பெரிது 1
பூண்டு - 5 பல்
மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 2 டீஸ்பூன் 
காய் - கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் எது பிடித்தமோ அந்த காய்..
புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து சாறு எடுக்கவும்)


தாளிக்க:

கடுகு - 1 / 4 ஸ்பூன்
வெந்தயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 / 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்

அரைக்க:

தக்காளி - 1 பெரிது
சீரகம் -  1 / 4 ஸ்பூன்
தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
(இவை எல்லாமும் சிறிது தண்ணீர் விட்டு, நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்)

செய்முறை:
        
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காயைப் போட்டு, சிறிது நேரம் வதக்கி பின்  நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் பொடி, மல்லிப்பொடி சேர்த்து, வதக்கி, கரைத்து வைத்திருக்கும் புளி சாரைச் சேர்க்கவும்.

குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.. பொடி வாசனை போனதும், அரைத்து வைத்துள்ள மசாலா (தக்காளி, சீரகம், தேங்காய் கலவை) சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும் இறக்கவும்.

இதை சூடான சாதத்தில் விட்டு, அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்...!!

வந்தது தான் வந்தீங்க... ஒரு வாய் சாப்பிட்டு போங்க...! :-))





(காரம், புளிப்பு அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டி குறைத்துக் கொள்ளலாம்....)

       









Tuesday, November 30, 2010

வற்றாத உன் நினைவு...!!!


வளர் பிறை நிலவாய்
வஞ்சி என் நெஞ்சத்தில்
வற்றாத உன் நினைவுகள்..!

பால் நிலவைக் காண்கையில்
எல்லாம் நான் செய்த
பாக்யமாய் உன் உறவு..!

பகலும் என்னுடன் பகை கொள்ள
இரவும் என்னிடம் இம்சை செய்ய
உன் உறவிற்காய் உருகும் நான்..!

தொடரும் நாட்களில்
தொடவும் கூடாதென்றாய்..
தொலைவில் நிற்கையிலும்
தொல்லை செய்கிறாய்...!

அன்பின் வலி என்னை
உன்னருகில் இழுக்கையில்
அருகில் வந்தாலோ
அந்நியனாய் ஆகின்றாய்..!

நித்திரையில் கூட உன்
நினைவலைகள் தொடர..
சித்ரவதை செய்துவிட்டு
சிரித்துச் செல்கிறாயே..!

கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
கண்ணாளா உனக்குக்
காலம் கூட இருக்கிறதா என்ன?

கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை
சூறையாடி சென்று விட்டு
இனி வேறென்ன என்பாயே..
என்னவென்று நான் சொல்ல..!

உறவென்று வந்தாய் என்
உள்ளத்தைத் தைத்தாய்...
உருகும் பனியாய்
உன் நினைவில் நான்..!!

நிமிடங்கள் ஒவ்வொன்றும்
இமைக்காமல் நீ உழைக்க
என் நினைவும் கூட
உனக்கு வருமோ என்று
நெகிழ்ந்தே நான் கேட்க...

நினைவில் நின்றவளை
நெஞ்சில் நிறைந்தவளை
நெருங்க இயலாமல்
இரும்பாய் நான் என்றாய்...!!

                              .....அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)