topbella

Wednesday, March 30, 2016

வெறும் சாட்சியாய்...!


என்னெதிரில் வெற்று பக்கம்... எதையும் தன்னில் ஏந்திக் கொள்ளாமல் எத்தனை அழகு இதன் வெறுமையில்.... ஏதோ எழுதுவதாய் எண்ணியே இயற்கை அழகை சிதைத்தும் ஆனது... மனதும் இவ்வாறே வெறுமையாய் இருக்க வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்... இருக்கும் இம்மி இடமும் வெறுமை இல்லாது விளையாட்டாய் வேடிக்கையாய் வெவ்வேறு விஷயங்கள்.. அவைகள் வேர் ஊன்றி விடாதிருக்க முளையிலேயே வெட்டி எரிந்து விட எண்ணம் இருந்தும் செயலில் இயலாது பரிதவிப்பு.. 

ஏன் இத்தனை குழப்பங்கள்? எதற்காய் இத்தனை ஜோடனைகள்? இயல்பில் இனிமையாய் வாழ என்னென்ன இடைஞ்சல்கள்... கண் முன்னே...!  

ஏக்கம், எதிர்பார்ப்பு ஒரு புறமிருக்க... 
எதிர்வரும் தடைகளின் தாக்கம் 
நம்மை உலுக்கியே நிறுத்த... 
என்னென்ன செய்தால் 
எமக்கிங்கு நிம்மதி கிடைக்கும் 
என்றே ஏங்கியபடி எமதுள்ளம்.. 

அடர்த்தியான இருளில் அத்தனையும் ஒன்றே.. இயல்பாய் இருக்க எண்ணினால் முதலில் இயல்பில் இருக்க வேண்டும்.. மனதிற்குள் ஆயிரம் விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்க எங்கிருந்து நிம்மதி நாடுவது. எதையும் எளிதாய் எடுத்துக்கொள்ள ஏகப்பட்ட பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. சொல்வது எளிது.. செயல்படுத்துதல் கடினம்.. 

ஒரு விஷயம் நமக்கு எதிராய் நடக்கும் போது அதையே நினைத்து வருந்தி அமைதியை குலைத்துக் கொள்கிறோம். ஓரமாய் உக்கார்ந்து ஒரு மணி நேரம் வருந்தினால் உன் பிரச்சினை சரி ஆகி விடும் என்று யாராவது சொன்னால் ஒரு மணி என்ன? ஓராயிரம் மணி நேரம் உக்கார்ந்து வருந்தலாம்.. ஆனால் அப்படி அல்ல நடைமுறை. நடப்பது எதுவும் நம் கையில் இல்லாத போது அதற்காய் வருந்தி என்ன பலன்? 

உறவுகள் பல விதம்.. நம்மிடம் எதிர்பார்க்கும், எதிர்பார்த்தது நடக்காத போது ஏமாற்றத்தில் ஏளனம் செய்யும்..  எதையாவது செய்தால் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று கருத்து வரும்.. அதையே எதுவும் செய்யாமல் இருந்தால், சுயநலவாதி என்ற பட்டம் பரிசாய் கொடுக்கும்.. எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் வெறும் சாட்சியாய் மட்டும் இருத்தல் பல பிரச்சினைகளை தவிர்க்கும்.

ஏக இறையால் கூட எல்லாருக்கும் 
ஏற்றவனாய் இருக்க இயலாது.. 
நாம் எல்லாம் சாமானியன் 
இவர்களிடமெல்லாம் சான்றிதழ் பெற்று
சரித்திரமா படைக்க போகிறோம்....?! 

சின்ன சின்ன விசயங்களில் புதைந்து கிடக்கும் பேரானந்தம் நம்மில் பலர் உணர்வது கூட இல்லை.. இருபத்து நாலு மணி நேரமும் காலில் சக்கரம் கட்டாத குறையாய் ஓடி அலைகின்றனர். ஒரு விஷயம் படித்தது நினைவுக்கு வருகிறது. இளம் வயதில் உடலில் தெம்பும் வேகமும் இருக்கும்.. பல விஷயங்கள் அனுபவிக்க பணம் தேவைப்படும். ஆனால் அப்போது பணமிருக்காது. முதுமையில் பணம் இருக்கும், எதையும் அனுபவிக்க உடலில் தெம்பும் வேகமும் இருக்காது. ஒன்றிருந்தால் மற்றொன்று இருப்பதில்லை. இதுவே இயற்கை..!


...அன்புடன் ஆனந்தி




( படம்: கூகிள், நன்றி )








1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்.

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)