topbella

Monday, March 21, 2016

உணவே மருந்து...!

இப்போ எல்லாம் நாலு பேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே அதுல முக்கிய டாபிக் டயட், எக்சர்சைஸ் தான். என்ன இப்படி இளச்சிட்டீங்கன்னு ஒரு ஆள் கேக்கும்.. அதுக்கு உடனே இன்ஸ்டண்டா பதில் வரும்.. டயட்ல இருக்கேன்னு. அப்படி என்ன டயட் சொல்லுங்களேன்னு கேட்டா லிஸ்ட கேட்டே மயக்கம் வந்திரும் நமக்கு.. அவுக சொல்ற அளவெல்லாம் கேட்டு நெஞ்சு வலியே வந்திரும்.. இப்படி தான் ஒருத்தங்க என்கிட்டே ஒரு நாளைக்கு கால் கப் ரைஸ் தான் சாப்பிடணும்ன்னு சொன்னாங்க.. உடனே தெளிவா கேட்டேன்ல.. கால் கப்-ன்னு நீங்க சொன்னது சமைச்ச அரிசியா? சமைக்காத அரிசியான்னு? அடிக்க வந்துட்டாங்க போங்க.

எத்தனையோ வித விதமா உணவு கட்டுப்பாடு, உடல்பயிற்சின்னு எல்லாரும் ரூம் போட்டு யோசிக்காத குறை தான்.. சாப்பிடுற உணவே மருந்து. எதை.. எப்போ.. எவ்வளவு.. எப்படி சாப்பிடணும்னு பக்குவம் தெரிஞ்சு இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லி கேட்டு இருக்கோம்.. வயித்துல போடுறதையும் அளந்து போட்டுட்டா பாதி அவதி இல்ல.

சில பேர் ஏழே நாளில் உடம்பு குறைக்கிறோம்னு பட்டினியா கிடந்து  ப்ரோடீன் ஷேக்ன்னு எதை எதையோ பொடிய வாங்கி கலக்கி குடிச்சிட்டு.. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆய்ட்டேன் பாருன்னு ஒரேயடியா உடம்ப குறைச்சிட்டு வந்து நிக்குற அடுத்த சில மாசங்கள்ல.. குறைச்சத விட டபுளா வெயிட் போட்டு கஷ்ட படுறதையும் பாக்கிறோம். இயற்கையா உடம்புக்கு எந்த பாதிப்பும் இல்லாத மாதிரி உடம்ப குறைச்சால் ஒழிய அதை அப்படியே கட்டுக்குள்ள வைக்கிறது கஷ்டம் தான்.

பசிக்கும் போது சாப்பிட்டா போதும். அட்டவணை போட்டு அடிச்சு நிமித்த கூடாது.. பொதுவா இப்போ இருக்குற கால கட்டத்துல நாம உபயோகிக்கிற பொருட்கள்ல பெரும்பாலும் நச்சு தன்மை தான் கூடுதலா இருக்கு. வீட்ல தயாரிக்கிற எளிமையான சாப்பாடு ஆயிரம் வகை இருக்கு.. பயறு வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் ன்னு டெய்லி சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா நல்லதாம்..

அதையும் எங்க ஒழுங்கா சாப்பிட விடுறாங்க.. பயறு வகைல கலரா பளிச்சுன்னு இருக்கணும்னு இஷ்டத்துக்கு கலர் அடிச்சி விக்கிறாங்க.. காய்கறி பழங்கள் மேல சீக்கிரம் அழுகி போய்ட கூடாதுன்னு மருந்து அடிச்சி வைக்கிறாங்க. மசாலா பொடில இருந்து மஞ்சள் பொடி வரை எல்லாத்துலயும் எதாச்சும் எக்ஸ்ட்ரா பிட்டிங் சேர்த்து வச்சிர்ராங்க.

காலம் கலி காலம் ஆயிருச்சு.. எல்லா பொருளும் நாம என்னவோ காசு கொடுத்து தான் வாங்குறோம்.. கூட அஞ்சு பத்து அதிகம் வாங்கிட்டாலும் பரவாயில்ல.. இப்படி கண்டதை சேர்க்காம இருந்தா நல்லா இருக்கும்.  அந்த காலத்துலேயே மாசத்துல குறைஞ்சது ரெண்டு நாளாச்சும் எதாச்சும் ஒரு காரணம் சொல்லி விரதம் இருப்பாங்க. உடலுக்கு அரைக்கிற வேலைல இருந்து ஓய்வு கொடுக்குற ஐடியாவா இருக்கும். அதையெல்லாம் இப்போ யாரு ஃபாலோ பண்றோம்...?!

நம்ம நாட்டுல பாரம்பரியமா தாத்தா பாட்டி காலத்துல சாப்பிட்டு வந்த கம்பு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கருப்பட்டின்னு எத்தனையோ நல்ல விசயங்கள் இன்னைக்கும் கிடைக்க தான் செய்யுது. அதையெல்லாம் நம்ம சாப்பாட்டுல சேர்த்துக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாச்சும் எதாச்சும் உடற்பயிற்சி அவசியம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. நியாயமாத்தான் சொல்றாங்க.. அந்த ஒரு மணி நேரம் எப்போ செய்யலாம்னு யோசிச்சி முடிக்கவே ஒன்பது மணி நேரம் வீணாப் போயிருது.. அதே போல சாப்பிடுற அளவு தான் ரொம்ப முக்கியமாம். மூணுவேளை அட்டவணை போட்டு சாப்பிடுறதுக்கு பதிலா அதையே பிரிச்சு கொஞ்சம் கொஞ்சமா ஆறு வேளை கூட சாப்பிடலாம்னு சொல்றாங்க. இப்படியா ஆளுக்கு ஒரு கருத்து எல்லாரும் சொல்லிட்டே தான் இருக்காங்க...

சமீபத்துல படிச்ச விஷயம்.. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இனியன் என்னும் முன்னாள் இராணுவ வீரர், 13 வருஷமா தேவைப்பட்டால் வெறும் தண்ணீர் மட்டும் குடிச்சுட்டு காற்றுணவுல உயிர் வாழுறாராம்.  இதை யோக வாழ்வுன்னு சொல்றார். மத்தவங்களுக்கும் கற்றுக் கொடுக்கிறாராம். அவர் குறிப்பிட்ட விசயங்கள்ல ஒண்ணு சித்தர் ஒருவரின் கூற்று என் எண்ணத்தை கவர்ந்தது.. "ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் ரோகி, மூவேளை உண்பான் போகி". இதுல நம்ம என்ன ரகம்னு நாமளே முடிவு பண்ண வேண்டியது தான்...!!!

...அன்புடன் ஆனந்தி 


1 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)