ஆசைகள் அடக்கி ஆண்டவனை ஆழ்மனதில் இருத்தி... அமைதியாய் அமர்ந்திருந்தால் அகிலமும் கைவசப் படும்.. நிறை குடம் என்றும் ததும்புவதில்லை... தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் எல்லாரிடத்தும் பறை சாற்றி... பெருமை பட்டுக்கொள்ளும் சுய சொறிதல்.. எங்கும் சூழ்ந்து விட்டது. திறமை இருப்பவன்.. திமிராய் நடக்கிறான்... வகை இருப்பவன்.. வாழ்ந்தே காட்டுகிறான்... இங்கும் இல்லாது அங்கும் இல்லாது.. இடையில் கிடந்து.. தங்களுடன் இருப்பவர்களை இம்சை செய்பவர்களை என்னவென்று சொல்வது...?
இருந்தால் கொடு.. இல்லையென்றால்.. சும்மா இரு. கொடுப்பவனை குற்றம் சொல்லாதே.. அதிலும் குறை காணாதே.. வழமையாய் வந்துவிட்ட விஷயம்.. வாய் கிழிய பேசுதல்... பேச்சு... இதில் தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.. சில நேரங்களில் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத எண்ணற்ற விடயங்கள்.. வாய் பேசாதிருக்கும் போது... வந்து விழுகிறது. நம்மில் பலருக்கு தன் வீட்டு விசயங்களை விட.. அடுத்தவர் விசயங்களை அறிந்து கொள்வதில் தான் ஆனந்தம் அதிகமாய் கிடைக்கிறது என்று எண்ணம்.
ஒரு விஷயம்.. யோசித்துப் பார்த்தால்.. அவனவனுக்கு இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கவே.. சந்தர்ப்பங்கள் சரியாய் வாய்ப்பதில்லை.. அப்படியே சந்தர்ப்பம் வாய்த்து அதைச் சரிவரச் செய்யினும்... பிரச்சினை என்னவோ பல நேரங்களில் தீர்ந்த பாடில்லை... இதில் அடுத்தவர் பிரச்சினைகளை அறிந்து என்ன செய்யப் போகிறோம்..? தெரிந்து என்ன நிறைந்து விடப் போகிறது.. இல்லை தெரியாவிடில் என்ன குறைந்து விடப் போகிறது... தேவையற்ற சுமை.. நம்மை கீழே தள்ளும் பழு... இப்படித் தேடிப் போய் பின்பு தெளிந்து விலகி.. தெய்வத்தின் துணை தேடி அலைவது உறுதி..!
யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்.. அவரவர் திறமைக்கு ஏற்பத்... தகுதி அடைகிறார்கள்.. இங்கும் ஆயிரெத்தெட்டு அரசியல்... ஒருவன் நல்ல நிலைமையில் இருந்தால்.. என்னென்ன செஞ்சு இந்த நிலைமைக்கு வந்தானோ.. என்று ஒரு சொல்.. அதுவே... பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும்.. அவனை சும்மா விடுவது இல்லை... அங்கேயும் ஒரு இலவச கருத்துக் கணிப்பு... என்ன பாவம் பண்ணானோ... பிச்சை எடுத்துட்டு இருக்கான் பாருன்னு.. பிச்சையும் எடுக்க கூடாது... பில் கேட்ஸ்சாவும் இருக்க கூடாதுன்னா... ஒரு மனுஷன் என்ன தான் செய்யணும்ரீங்க...?!
மனம் ஒரு குரங்கு.. ஒரு இடத்தில் அமைதியாய் நம்மை இருக்க விடாது.. அந்த மனதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தான் நம் சுய கட்டுப்பாட்டின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. மனதை அடக்கினால் மகாதேவனை அடையும் மார்க்கம் தென்படும். மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது...? ஆர்வத்தின் அடிப்படையில் சில பல விடயங்கள் தம்மை அறியாது செய்து விட்டு பிறகு சிந்தித்துப் பார்க்கையில்... அவைகள் அவசியமே இல்லை என்று உணர்கையில்... மன அழுத்தம் ஏற்படுகிறது... நிம்மதி இழக்க நேரிடுகிறது... கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்தென்ன பலன்..? நமது சுயம் இழக்கச் செய்யும் செயல்களை விட்டு விலகுதல்.. நம் மன அமைதிக்கான ஆரம்பமாகலாம்...
நமது செயல்களால், நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரையும் ஒருசேர நம்மால் திருப்தி அடையச் செய்ய முடியாது.. எதெது செய்தால்... யார் யார் மகிழ்வர் என்று கணக்கிட்டு செய்து செய்தே.. நம் காலங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒருவருக்கு சாதகம் தரக்கூடும் என்று நாம் செய்யும் செயல் மற்றவருக்கு பாதகமாய் ஆகி விட வாய்ப்புகள் அதிகம் உண்டு. அவ்வாறிருக்க எக்காலம் நாம் எதைச் செய்து... எவரெவர் மகிழ்ச்சி அடைந்து... நாம் இக்காலம் கடக்கப் போகிறோம்...?
விடை தெரியாத வினாக்கள்... விமரிசையாய் கண் முன்னே..!
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
7 comments:
யார் யார் மகிழ்வர் என்று கணக்கிட்டாலே பிரச்சனைகள் ஆரம்பம்...
காலம் / அனுபவம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்...
என்னதான் ஆச்சு? ஏன் இத்தன கேள்விகள்?
கட்டுரை அருமை!!!!!
எல்லாவற்றிற்கும் விடை இருப்பதானால் எப்போதும் தொல்லை என்பதே இல்லையே! எல்லோருக்கும் நல்லவர்களாய் யாராலும் எப்போதும் இருக்கமுடியாது. இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நம்மை நாம் அறிந்திருந்தால் மட்டுமே போதுமானது! ஆண்டவன் நம்முள் இருக்கிறான் என்றே அர்த்தம்! மனம் ஒரு கோயிலே! ஆசைகளை அடக்கவேண்டும் என்பதே இல்லை! அது பேராசையாக ஆகவிடாமல் இருத்தலே நலம்! வீண் எதிபார்ப்புகளே ஏமாற்றங்களுக்கு காரணம். ஒரு சிலர் தம்மிடமே பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு மற்றவர்களிடமும் அதையே திணித்து ஆதாயம் அடைய நினைக்கும் போது தான் மனிதர்களின் உண்மையான நிறம் தெரிகிறது. வயதுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது ஏன் தாழ்மையான கருத்து! மற்றவர் முகத்தை கண்ணாடியாக பார்க்காதே என்பதை நான் எனக்கே தினம் சொல்லிகொள்வது!
பிழை ஏதேனும் இருப்பின் பொருத்தருள்க!
வலைச்சரத்திலே ஒரு பிச்சைக்காரன்
வருவோருக்கெல்லாம் வாரி வழங்குகிறான்
அவன் வழங்கிய உணவு உண்ண
ஆம். அவன் வழி காட்ட
இங்கு வந்தேன்.
// நமது செயல்களால், நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரையும் ஒருசேர நம்மால் திருப்தி அடையச் செய்ய முடியாது.. எதெது செய்தால்... யார் யார் மகிழ்வர் என்று கணக்கிட்டு செய்து செய்தே.. நம் காலங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.//
மகிழ்ச்சிக்கு இது முதல் படி தெளிவு.
தங்கள் சிந்தனை இந்த தெளிவினைத் தருகிறது.
அன்புடன்,
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
www.vazhvuneri.blogspot.com
கவிதைப்போல ஒரு உரைநடை , உரைநடைப்போல ஒரு கவிதை சூப்பர் :-)
@திண்டுக்கல் தனபாலன்
உண்மை தான்.. கருத்திற்கு நன்றி.
வலைச்சரம் பற்றி தகவல் தந்தமைக்கு நன்றிகள்.
@விஜி
மனம் ஒரு கோவில்.. ஆண்டவன் நம்முள்ளேயே இருக்கிறான்.. முற்றிலும் உண்மை. கருத்திற்கு நன்றி.
@logu
நன்றி.
@சுப்பு தாத்தா
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
@ஜெய்லானி
தங்கள் கருத்திற்கு நன்றி.
காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்... நீங்களே பதிலைத் தேடுங்கள்!!! கிடைத்து விடும்...
Post a Comment