மழை விட்ட நேரம்
மரக்கிளைகளில்
அங்கங்கே
மழைத்துளிகள்
விளையாடின
நகர்ந்த காற்று
சற்றே அவற்றை
நாட்டியம் ஆடச் செய்தது
இலை நழுவவிட்ட துளிகள்
தரையைத் தொட்டது
தரை தொட்ட துளிகள்
பூமியின் தாகம் தீர்த்தது
நிலத்தடி மண்புழுக்கள்
மெதுவாய் வெளிவந்து
மேகம் பார்த்தது
இரைக்குக் காத்திருந்த
பறவை ஒன்று
இதை இதமாய்ப் பார்த்தது
நொடிப்பொழுதில்
தரையிறங்கி
மண்புழுவைக்
கொத்தத் தொடங்கியது
விடுவித்துக் கொள்ள
மண்புழுவும்
விதவிதமாய்
முயற்சி செய்தது
பாவம் புழு என நினைத்தே
பாய்ந்து பறவையை
விரட்டினேன்
வேகமாய்ப் பறந்து
வெகு அருகில்
மரத்தில் அமர்ந்தது
அமர்ந்த பறவை
எங்கும் போகவில்லை
அசையாது
பார்த்துக் கொண்டிருந்தது
சற்றே மணல் நோண்டி
மண்புழுவை
பத்திரமாய்ப்
பதுக்கி வைத்தேன்
திருப்தியுடன்
திரும்பிய கணத்தில்
திடீரெனப் பாய்ந்து
தரையிறங்கியது
அந்தப் பறவை
எங்கு வைத்தேன் என்று
எப்படி அறிந்தது?!
எனக்குத் தெரியவில்லை
சரியான இடத்தில்
கொத்தித் தோண்டி
மண்புழுவை வாயில்
கவ்விக்கொண்டு
வானை நோக்கிப்
பறந்தது
இயற்கையின்
இயக்கத்தை
யார் தான்
நிறுத்த முடியும்?
அவரவர் வாழ்வை
அவர்களே தான்
வாழ்ந்தாக வேண்டும்
பெரிதாய் ஏக்கப்
பெருமூச்சு விட்டபடி
வீட்டிற்குள் சென்றேன்
நானும்!
நெல்லை அன்புடன் ஆனந்தி
மே 21, 2025
1 comments:
வெகு சிறப்பான காட்சி கவிதை
Post a Comment