முகத்தில் இனி விழிக்காதே என்று முத்தாய்ப்பாய் சொல்லிச் சென்றாள் மெய் மறந்து நின்றிருந்தேன் மெய்தானா என்றிருந்தேன்... பேசாமல் தினம் எப்படி கழிப்பது பேசியவற்றை எவ்வாறு அழிப்பது?! சுந்தரமாய் தெரிந்த உலகம் இன்று ஒன்றுமில்லா சூனியமாய்... கால் போன போக்கில் நடந்து சென்றேன்.. காலம் கடந்த உணர்வில் கலங்கி நின்றேன்.. வானம் இருள் சூழக் கண்டேன் எனக்காய் மருண்டதாய் கொண்டேன்.. எண்ணற்ற விசயங்கள் எனக்குள் எதிர் நீச்சல் போடக் கண்டேன்.. ஒற்றை சொல்லால் மயங்கச் செய்வாள் கற்றை குழலில் கிறங்கச் செய்வாள் வெறும் பார்வையில் வேதங்கள் சொல்வாள் சிறு மனக்கசப்பில் பேதங்கள் கொள்வாள்.. சிறு பிள்ளையாய் பேசிச் சிரிப்பாள் பெரும் ஞானி போல் கருத்து சொல்வாள் ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒரு மணி நேரம் வாதம் செய்வாள்.. கள்ளப் பார்வையில் காதல் சொல்வாள் கைகளில் பாவையாய் கண்மூடிக் கிடப்பாள்.. பொய்க் கோபம் கொண்டு பொருந்தா குணமாய் வாய் மூடி இருப்பாள்.. இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள் எண்ணியவாறே வீடு வந்து சேர்ந்தேன்.. அவள் இல்லாத வீடு எனக்குள் அச்சத்தை அளித்தது.. நினைவுகள் நிழலாய் எனை நீங்காமல் தொடர்ந்து வர உறக்கம் எனக்கு எதிரியாய் உயிர்ப்பாய் சத்யாகிரகம் செய்ய.. அசதியில் படுத்துக் கொண்டேன் ஆழ்ந்து உறங்கி விட்டால் எல்லாம் வீண் கனவாய் போய்விடாதா விளக்கணைத்தேன் விடையின்றி..!! ~அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)
1 comments:
கவிதை அருமை....
அவ்வப்போது வலையில் எழுதினாலும் தொடர்ந்து வருவது மகிழ்ச்சியே....
தொடருங்கள் தங்கள் கவிதைகளை...
வாழ்த்துக்கள்.
Post a Comment