சின்னச்சின்ன சந்தோசங்கள்...
சில்லென்று வீசும் காற்று..
சிரிக்கும் மழலை...
சிந்தும் மழைத்துளி..
சிதறிக் கிடக்கும் சருகுகள்..
சலசலக்கும் நீரோடை..
சத்தமாய் ஒலிக்கும் திருவிழா ஒலிபெருக்கி...
அதிகாலை கேட்கும் பறவைகளின் ஒலி..
அங்கங்கே தலையசைக்கும் தென்னை மரம்..
மனதை மயக்கும் இசை..
மழை நேரத்து மண் வாசனை..
மலர்ந்து விரிந்து நிற்கும் பூக்கள்..
அடித்து பிடித்து கொண்டு கொட்டும் அருவி...
அம்மாவின் அக்கறை...
அந்தி நேரச் சூரியன்..
மார்கழிக் குளிர்...
மாங்காய் வடு..
வெடித்து நிற்கும் கொடுக்காய்ப்புளி..
விண்ணில் மிதக்கும் வெள்ளை நிலா..
வாசலில் போடும் வண்ணக்கோலம்..
வாங்கிச் சேர்த்த புத்தகங்கள்...
காலில் குத்திய நெருஞ்சி முற்கள்..
கால் பொசுக்கும் மொட்டை மாடி வெயில்..
பனை ஓலைப் பதநீர்...
பரிசு வாங்கிய பேச்சுப்போட்டி...
தென்னை மரக் காற்று..
அதன் தெவிட்டாத இளநீர்...
விரிந்தும் விரியாத பிச்சிப்பூ வாசம்..
விளையாட வரைந்த பாண்டி கட்டம்..
கலர்கலராய் அணிந்த கண்ணாடி வளையல்கள்..
காதோரம் அணிந்த ஒற்றை ரோஜா..
இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.. இந்த அவசர உலகத்தில் இதற்கெல்லாம் இப்போது எங்கே நேரமிருக்கிறது... எப்போதும் எதையோ விரட்டிக்கொண்டே ஓடுவது போல ஒரு பதட்டமான நிலை.. நமக்கென்று நேரம் ஒதுக்குவதற்கே பல மாதம் திட்டமிட வேண்டியிருக்கிறது.. அப்படியே நேரம் ஒதுக்கி அமர்ந்தாலும் அப்போது தான் ஆயிரம் வேலை வரும். முன்பெல்லாம் தினமும் சில பல பக்கங்களை புரட்டினால் தான் அந்த நாளே நகரும்.. இப்போது புத்தகம் படிக்கவே சுய நினைவூட்ட வேண்டிய நிலை.. பிடித்த பாடலை அமைதியாய் அமர்ந்து ரசித்து கேட்கவும்.. பிடித்த உணவை செய்து ருசித்து உண்ணவும் கூட கொடுப்பினை வேண்டும்.
எதையோ தேடி எதற்கோ அலைந்து என்ன செய்கிறோம் என்றே உணர முடியாமல்.. ஒவ்வொரு நாளும் நம்மை விட்டு கரைந்து கொண்டிருக்கிறது. யாருக்காகவும் காலம் காத்திருப்பது இல்லை.. நம்மை சுற்றி இருக்கும் சின்ன சின்ன விசயங்களில் நிறைந்து கிடக்கும் ஆனந்தம் நம் கண்ணிற்கு தெரிவதில்லை.. அதையெல்லாம் ஒரு குழந்தையின் மனதோடு ரசித்து.. வாழ்க்கையை விரும்பியபடி வாழ்வதே ஒரு வரம்...!
...அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள் )
2 comments:
அருமை! படித்தேன், ரசித்தேன்!
எம்புட்டு நாளாச்சு இப்படியான எழுத்தைப் பார்த்து...
மிகவும் அருமை...
தொடர்ந்து எழுதுங்க....
Post a Comment