இயற்கையின் அம்சமே....
உன்னழகில் இமைக்கவும் மறந்தேன்..
வானத்தில் நீ வரைந்த ஓவியம் கண்டேன்..
வசீகரிக்கும் வண்ணங்களால்..
நீ வரைந்த புது காவியம் கண்டேன்..
வருவோர் போவோர் எல்லாம்
எங்கோ எதற்கோ பறந்த வண்ணம் இருக்க...
எதிர்த்து நடந்தவாறே உன்னழகை..
உள்வாங்கி ரசித்திருந்தேன்...
அது ஏதும் அறியாமல் நீயும்..
எளிமையாய் மிதக்கக் கண்டேன்..!
எத்தனை அவதாரம் எடுத்தே..
எழில் பல செய்வாய் நீ..
எங்கும் பரந்து கிடக்கும் வானத்தில்...
ஏகாந்த லீலைகள் செய்கிறாயா?
இல்லை ஏதுமறியாச் சிறுவன் போல்..
எழுதிப் பழகுகிறாயா..?
அதிர்ந்து அடிக்கப்போகும் மழையை உணர்த்தவோ..
அடர் கருப்பில் பஞ்சுப் பொதியாய்
ஆங்காங்கே நிற்கிறாய் நீ...?
கடும் வெயிலை கண்டிப்பவன் போல்..
கண்களுக்கே தெரியாமல்
கரைந்தே சென்று விடுகிறாயே ..?
வெள்ளி நிலா உலா வரும் நேரத்தில் நீ...
வெட்கத்தில் ஒளிந்து கொள்வாயா...?
இல்லை வேடிக்கை பார்ப்பது போல்..
இங்குமங்கும் விமரிசையாய் செல்வாயா..?
நினைத்து நிதம் ரசிக்கவோ..
காலைக் கதிரவன் வரும் வேளை...
கண்களுக்கு விருந்தாய் காட்சி தருகிறாய்...
நெகிழ்ந்து நெஞ்சம் நிறைக்கவோ...
ஆதவன் அஸ்தமிக்கும் நேரம்...
அனைத்தையும் அள்ளித் தெளித்தது போல்..
அலங்கார தோரணமாய்...
அங்குமிங்கும் ஆர்ப்பரிக்கிறாய்...
அழகே உன் ஆட்சி ஆகாயத்தில் தொடரட்டும்.....
...அன்புடன் ஆனந்தி
3 comments:
அருமை
படம் கவிதையாயும் கவிதை சித்திரமாயும் சிறக்கின்றது ஆனந்தி!
கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரி.
Post a Comment