topbella

Sunday, January 19, 2014

இச்சை தரும் இம்சை...!
அன்றாட வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் ஒரு மனிதனின் தேவையாக இருப்பது இயற்கை.. குடியிருக்க ஒரு இடம், பசித்த வேளைக்கு உணவு, உடம்பு மறைக்க உடை... இவைகளே அடிப்படை தேவைகளாக கருதப்படுகிறது..  இதற்குத்தான் அனைவரும் இந்த பாடு படுகிறார்களா..?  இது தவிர்த்து நமக்கு தேவைப்படுவன அனைத்தும் நம் மனதின் இச்சைகள். இச்சைகளுக்கு எல்லைகளே இல்லை.. 

யோசித்துப் பார்த்தால்... அடிப்படை தேவை மட்டுமே ஒருவரின் எல்லையாக இருக்கும் பட்சத்தில்.. அது சார்ந்து உழைத்து நகரும் போது... எந்த வித இன்னல்களும் வர வாய்ப்பில்லையே என்று தோன்றுகிறது... இச்சை என்று எதை வரையறுப்பது...? தேவைக்கு மீறி நாம் அடைய விரும்பும் அனைத்துமே.. இச்சைகள்.

இச்சைகள் தொடங்கும் இடத்தில் இம்சைகளும் உடன் வந்து விடுகிறது. இருக்கும் வீட்டில் ஆரம்பித்து.. உடுத்தும் உடை வரைக்கும்... அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறோம்... இப்பொழுதெல்லாம் அவரவர் தாம் வசிக்கும் வீட்டை விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர.. அவர் தம் மனம் விசாலமாக இருப்பதும் இல்லை.. உண்மையான மகிழ்ச்சியோடு இருப்பதும் இல்லை..

அம்மா, அப்பா, குழந்தைகள் சில.. என்று உள்ள ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய வீடு தேவைப்பட போகிறது..? ஆனால் இப்போது காலக்கொடுமை... வீடுகள் பெரிதாகிக்கொண்டே போகிறது.. வீட்டில் உள்ள மனிதர்கள் எண்ணிக்கையும்... அவர்களுக்கான தொடர்புகளும் குறைந்து கொண்டே வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் சிவம்.. தொடரில் சமீபத்தில்.. இந்த தேவைக்கும் இச்சைக்கும் உள்ள வேறுபாட்டை சிவன் கூறுவது போல் வரும்.. அதில் ஒரு சிறிய கதை சொல்வார்.. ஒரு வணிகன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான்.. அவன் தொழிலும் சிறப்பாக அமைந்து.. அவனது தேவைகளுக்குப் போதுமான பொருளும் ஈட்டினான்.. அவன் மனைவி மக்கள் மகிழச்சியாக இருந்தனர்.. ஆனால் வணிகருக்கோ.. மனநிறைவு ஏற்படவில்லை..  

மேலும் பொருள் ஈட்ட வேண்டும்.. நிறைய நில புலன்கள் வாங்க வேண்டும்... பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று எண்ணம் மேலோங்க... இறைவன் விஷ்ணுவை வேண்டி தவம் செய்ய துவங்கினான்.. பல ஆண்டுகள் அன்னம் ஆகாரம் இன்றி அவன் செய்த கடுமையான தவத்திற்கு பலனாய் இறைவன் விஷ்ணு அவன் முன் தோன்றி.. தவத்தால் உள்ளம் குளிர்ந்தேன்.. வேண்டும் வரம் என்ன என்று கேட்க.. வணிகனும்.. "நான் கண்ணால் காணும் இடம் எல்லாம் எனக்கே சொந்தமாக வேண்டும் என்றான்..". இறைவனும் யோசித்து விட்டு.. "சரி.. உன் கண்ணில் நீ காணும் இடமெல்லாம்  உனக்கே சொந்தமாகும்.. உன் கண்ணில் படாதவை உனக்கு சொந்தமல்ல".. என்று சொல்லிவிட்டு மறைந்தார். 

வணிகனுக்கு தலை கால் புரியவில்லை.. நானே இந்த உலகத்தில் பெரும் செல்வந்தன் என்று கூறிய படியே.. தன் எதிரில் கண்ட இடங்கள் எல்லாவற்றையும்.. இது எனது.. என் இடம்.. எனக்கே சொந்தம்.. என்று கூறியவாறே.. சென்றான்.. வெகுதூரம் வந்தும்.. அவன் ஆசை அடங்கவில்லை.. மேலும் நிறைய இடங்களை கண்ணால் கண்டுவிட வேண்டும் என்ற பேராசையில்... ஓடிக்கொண்டே இருந்தான்... விளைவு.. அவன் மன வேகத்திற்கு.. உடல் ஒத்துழைக்க வில்லை.. அன்ன ஆகாரம் இன்றி.. உயிர் நீத்தான்...!

மனம்... ஒரு குரங்கு என்று சொல்லக்கேட்டிருக்கிறோம்... மனதை கட்டுக்குள் வைக்காது அதன் போக்கில் அலைய விட்டால்... அல்லல்களே எஞ்சும். நிறைவான மனதில் நிம்மதி குடியிருக்க தொடங்கும்.. நிறைவடையாத மனமோ... எது நிறைவென்றே அறியாது எதனெதன் பின்னோ அலையும்..!

மனதின் இச்சைகள் அடக்கி.. ஆள... பக்குவப்பட்டு விட்டால்... இன்னல்கள் தவிர்த்து இன்பமாய் வாழ வாசல் திறக்கும்..!


...அன்புடன் ஆனந்தி 


(படம்: கூகிள், நன்றி)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கதை அருமை...

நல்ல கருத்துகளுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Vijaya Vellaichamy said...

மனதை அடக்கியாள ஒரு சித்தனால் தான் முடியும் . ஆனால் ஒரு சராசரி மனிதனை போதும் என்ற மனம் கொண்டு வாழ அவனுடைய சமுதாயம் (ஒரு சிலர் தவிர) பல சமயங்களில் விடுவதில்லை. அந்த சூழ்நிலையில் அப்படிப்பட்ட மனிதர்களை விட்டு தள்ளி வாழ்வது பல நன்மைகளை தரத்தான் செய்கிறது. பார்க்காத ஒன்றின் மேல் ஆசை வருவதில்லை! இது நான் உணர்வுபூர்வமாக அறிந்த ஒன்று. இப்பொழுது உள்ள கால கட்டத்தில் உறவானாலும் , நட்பானாலும் தற்பெருமை மட்டுமல்லாது, தன்னிடம் எல்லாம் உள்ளது, இருப்பவன் எப்போதும் வெற்றி கண்டவன், அவன் அளவு இல்லாதவன் பிழைக்க தெரியாதவன் என்றும் ஒரு மிதப்பில் இருக்கிறது. சுயநலம் பெருகிக்கொண்டே போகிறது. சுயநலம் என்பதே ஆசை அதிகமானால் வருவது தானே! மனித மனம் குரங்கு என்பதைவிட ஆர்ப்பரிக்கும் கடலில் துடுப்புகள் இல்லா படகு. வெறும் கைகளால் இலக்கை அடைய முடியாது. சித்தனாகும் முயற்சியில் நான்!

Priya said...

உண்மைதான் ஆனந்தி.. 'மனதின் இச்சைகள் அடக்கி.. ஆள... பக்குவப்பட்டு விட்டால்...' நிச்சயம் இன்பம்தான்.. !!!

'பரிவை' சே.குமார் said...

மனதின் இச்சைகள் அடக்கி.. ஆள... பக்குவப்பட்டு விட்டால்... இன்னல்கள் தவிர்த்து இன்பமாய் வாழ வாசல் திறக்கும்..!


உண்மைதான் சகோதரி....

நிறைய எழுதுங்கள்...

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)