topbella

Monday, August 27, 2012

யாருமில்லா வனத்தில்...!



யாருமில்லா வனத்தில் 
கவலைகள் கடந்த கணத்தில்..
இயற்கையின் எழிலின் சிலிர்ப்பில் 
இறைவா உன் நினைப்பில் 
என் துணையோடு 
ஒரு தொடர் பயணம்...

இயந்திர வாழ்வின் 
இறுக்கம் தளர்த்திப் போட்டு 
எல்லையில்லா பரபரப்பின் 
கட்டுக்கள்  உடைத்துப் போட்டு 
மெட்டுப் போட்ட படியே 
மெதுவாய் உன்னோடு நடப்பு....

காலைக் கதிரவனின் 
கண்கொள்ளாக் காட்சியை 
என் காதல் கணவனின் 
கை கோர்த்து கண்ட படியே
கூவித் திரியும் குயில்களின் 
குரலோசை கேட்டபடி 
நான் மேவித் திரிந்தே 
மெதுவாய் நடை பயில்வேன்..

பல நாள் கனவின் ஒலி 
எனைச்  சிலை போல் 
செதுக்கக் கண்டேன் 
பச்சை மரங்களின் அழகில் 
இச்சை நான் கொண்டே
பதறாது ஒரு கணமும் சிதறாது
கோர்த்து வைத்தேன்...

ஒற்றையடிப் பாதையில் 
உன்னோடான உயிர்ப்பில் 
உறவே உனை உள்வாங்கி
உலகத்தை நான் வெல்வேன்..

காளை உன் கை கோர்த்தபடி 
கவிதைகள் நாம் செய்வோம் 
கடந்து போகும் பாதையெல்லாம் 
மிதந்து போகும் காற்றை கொய்வோம்...

ஏட்டில் எழுதாத 
ஏகாந்தம் பலவற்றை 
எண்ணற்ற ஆசைகளை 
எளிதாய் பேசியபடியே 
ஏக்கங்கள் தீர தீர 
எடுத்துக்காட்டாய் வாழ்வோம்...

கண்முன்னே விரிந்து கிடக்கும் 
காலைப் பனியில்...
கண்மூடித் த்யானம் செய்வோம்
காதருகே கவிதைகள் பல சொல்லி 
காவியம் நாம் படைப்போம்...

வேளை தப்பாது 
விண்மீனை கைது செய்தே 
விரல் சொடுக்கி 
வேலை  வாங்குவோம்
நாளை என்னவென்ற
கவலை சிறிதுமின்றி 
நாட்டியம் நாம் பயில்வோம்...

காதலே உன்னுடன் 
கவிதை செய்வேன்... 
என் கவிதையே உன்னைக் 
காதல் செய்வேன்....!


~அன்புடன் ஆனந்தி

10 comments:

Anonymous said...

அற்புதமான கவிதை.. இயற்கையின் அழகை காதலிக்கத் தொடங்கிவிட்டால் நமக்கும் பிரச்சனை இல்லை, இயற்கைக்கும் அழிவில்லை !!!

Yaathoramani.blogspot.com said...

ஏகாந்தத்தின் அருமையை அழகை ஆனந்தத்தை
தங்கள் படைப்பின்மூலம் நாங்களும் அனுபவித்தோம்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Tamilthotil said...

காதலே உன்னுடன்
கவிதை செய்வேன்...
என் கவிதையே உன்னைக்
காதல் செய்வேன்....!

அருமையான வார்த்தை விளையாட்டு, வாழ்த்துகள்

இந்திரா said...

// கண்முன்னே விரிந்து கிடக்கும்
காலைப் பனியில்...
கண்மூடித் த்யானம் செய்வோம்
காதருகே கவிதைகள் பல சொல்லி
காவியம் நாம் படைப்போம்...//

அழகான கோர்வை

பூங்குழலி said...

பல நாள் கனவின் ஒலி
எனைச் சிலை போல்
செதுக்கக் கண்டேன்
பச்சை மரங்களின் அழகில்
இச்சை நான் கொண்டே
பதறாது ஒரு கணமும் சிதறாது
கோர்த்து வைத்தேன்...


காலை பனி போல் மனதை குளிர்விக்கும் அழகான கவிதை

பட்டிகாட்டான் Jey said...

அம்மனி செளக்கியமா... வருசங்களாச்சு இங்க வந்து....

கவிதையெல்லாம் பின்னுரீங்க...அப்போது மாதிரியே இப்பவும் எனக்குதான் புரியுரதில்லை.
ஏதும் உரைநடையா எழுதினா மெயிலுக்கு தட்டிவிடுங்க... வந்து பின்னூட்ட வசதியா இருக்கும்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@இக்பால் செல்வன்
உண்மை தான். உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.


@ரமணி
மிக்க நன்றி. உங்கள் வருகைக்கு நன்றி.



@தமிழ்ராஜா. k
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.



@இந்திரா
ஹ்ம்ம்.. தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி இந்திரா.


@வரலாற்று சுவடுகள்
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.



@பூங்குழலி
உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி.



@பட்டிக்காட்டான் jey
யாருக்கும் மெயிலுக்கு அனுப்பும் வழக்கம் இல்லை. வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

Unknown said...

கவிதை அருமை.. சமையல் கலையில் உங்கள் ஈடுபாடு அறிவேன் விருப்பம் இருந்தால் போட்டியில் கலந்துக்கொள்ளவும்.. hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

dogra said...

இயற்கை, மன அமைதி, கவிதை, காதல், ஒற்றையடிப் பாதை பயணம், நகரத்தின் சத்தங்களையும், கவலைகளை விட்டு 'அவருடன்' ஒரு ஏகாந்தமான இடத்தில் கவிதையின் மீது காதல், காதலின் பற்றிய கவிதைகள் மட்டுமே வாழ்வியல்--- இவ்வினைத்தையும் வரையறுக்க ஒரு அழகான, பசுமையான படம்.

வாவ்! கனவைப் பாராட்டுவதா? அதன் வெளிபாட்டைப் பாராட்டுவதா?

ஒட்டுமொத்த perfection!

Dogra, Chennai

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)