topbella

Tuesday, October 26, 2010

அமெரிக்க வாழ்க்கை .....பாகம் 5

முந்தைய பதிவுகள்: பாகம் 1 , பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4

            இங்கே உள்ள பாடத்திட்டம் பத்தி சொல்லணும்.. எலிமெண்டரி லெவல் (5 ஆம் வகுப்பு வரை) ரொம்ப எளிமையா தான் இருக்கும். இங்க உள்ள பெரும்பாலான பேரன்ட்ஸ் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுத்திருவாங்க. நம்ம ஊரில் டியூஷன் மாதிரி, இங்கயும் நிறைய பேர் சொல்லித்தராங்க.. அதுல எதாவது ஒண்ணுல சேர்த்து விட்டுட்டு படற பாடு இருக்கே? (அதுக படுற பாடு போதாதுன்னு, நாமளும் சேர்ந்து படணும்)..

          முதல்ல எல்லாம் நல்லாத் தான் போகும்.. கொஞ்ச நாள்லயே குட்டீஸ்-கு போர் அடிக்க ஆரம்பிச்சிரும்.. 10 நிமிஷத்துல முடிக்க வேண்டிய வேலைய மணிக்கணக்கா யோசனை பண்ணி அவுங்க முடிக்கறதுக்குள்ள.. நமக்கு பியூஸ் போயிரும்.  இந்த அழகுல இவரு வேற கடமை தவறாம போன் பண்ணி, என்னம்மா.. ஸ்கூல்-ல இருந்து வந்தாச்சா? (பின்னே ஸ்கூல் முடிஞ்சு வராம எங்க போவும்) சாப்பாடு குடுத்தாச்சா? (ஏன் குடுக்கலேன்னா வந்து குடுக்க போறீங்களா?) ஹோம் வொர்க் பண்ண வச்சிரு..! (அதானே பார்த்தேன்... சரி ரைட்ட்டு) இதான் டெய்லி ரொட்டின் கேள்வி.. நா கூட ஒரு நாள் சொன்னேன்.. "ஏங்க, பேசாம இந்த டயலாக் எல்லாம் ரெகார்ட் பண்ணி டெய்லி, 3 மணிக்கு நானே ஒரு தரம் ப்ளே பண்ணி கேட்டுக்கரேன்னு...!".
(படிக்கச் சொன்னா எங்க பாத்துட்டு இருக்கு பாருங்க)

            பொதுவா இங்க பள்ளிப் பாடத் திட்டம் எளிமையா இருந்தாலும், மிடில் ஸ்கூல் லெவல் வரும் போது பிள்ளைங்க கஷ்டப் படக் கூடாதுன்னு தான் இந்த மாதிரி டியூஷன் எல்லாம் சேர்த்து விடறது.  இன்னொரு கூத்து உங்க கிட்ட சொல்லியே ஆகணும். என் குழந்தைகள் இப்போ தான் எலிமெண்டரி லெவல் இல்லையா? அதனால எனக்கு சில பல விஷயங்கள் இன்னும் தெரிய ஆரம்பிக்கவில்லை. அதாவது, இங்க SAT , ஸ்பெல்லிங் பீ, MATH QUIZ ... இந்த மாதிரி விஷயங்கள் நிறைய இருக்குங்க.  ஒரு நாள் குட்டீஸ்-ஐ டியூஷன் கிளாஸ் கூட்டிட்டு போயிருந்தேன். அவங்க உள்ள போய்ட்டாங்க, நான் waiting ஹாலில் உக்காந்திருந்தேன்.

          எப்பவும் போல் மற்ற பெற்றோர் இருந்தாங்க.. அதில் தெரிந்த இருவர் இருக்கவே ஏதோ கேட்டாங்க பேசிட்டு இருந்தோம்.  திடீர்னு, அவங்க என் பொண்ணு OCA போறா, உங்க பொண்ணு எங்க போறான்னு கேட்க, நானும், (ஏதோ, அந்த ஸ்பெஷல் கிளாஸ் மாதிரி ஏதோ அனுப்புறாங்கன்னு நினச்சு) ஓ.. ரொம்ப நல்லது. நான் இன்னும்  என் பொண்ணை அப்படி ஏதும், சேக்கலை என்று சொன்னேன்.. அவங்க அதுக்கு ஏன் அவ ஸ்கூல் போகலியானு கேட்டாங்க.. இல்லையே,  ஸ்கூல் போறான்னு சொன்னேன். அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க OCA னு ஏதோ MCA ரேஞ்-ல சொன்னது அவங்க ஸ்கூல் பேரோட சுருக்கம்னு... ஸூஊஊ... கொஞ்ச நேரத்துல நாம தான் நம்ம புள்ளைய ஒண்ணுலயும் சேக்கல போலன்னு பீலிங்க்ஸ் ஆயி போச்சு போங்க.. ஏண்டா..... ஸ்கூல் பேர முழுசா சொன்னாத் தான் என்ன? மனுசங்களுக்கு  பீதிய கிளப்பி விட்டுட்டு...!!




            அப்புறம் இதெல்லாம் தாண்டி பெண் குழந்தைனா பாட்டு, டான்ஸ், ஸ்கேடிங், டென்னிஸ்.....இந்த மாதிரி நிறைய கிளாஸ் இருக்கு. ஆண் குழந்தைக்கு பாட்டு, வயலின், பியானோ, சாக்கர், கராத்தே.........இந்த மாதிரி நிறைய கிளாஸ் இருக்கு. என் பொண்ண, டான்ஸ் கிளாஸ்-ல சேர்த்து விட்டேன். அவ ஆடுறாளோ இல்லியோ, வீட்டில அவளை ஆட வைக்க நா ஆடுறேன்.. (ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. உடனே அப்படியான்னு கேக்க பிடாது...). என்னைப் பொறுத்த வரையில் எத்தனை கிளாஸ் சேர்க்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதாச்சும் ஒண்ணுல சேர்த்தாலும் அத உருப்படியா செய்ய வைக்கணும்.. அவ்ளோ தாங்க...!

....... (தொடரும்)


(படங்கள்: நன்றி கூகிள்)


Wednesday, October 20, 2010

மழை...!!!


வானிலே உன் ஜாலம் முடித்து
பூமியில் புதியதாய் வீழ வந்தாய்...!!

வெயிலில் தகிக்கும்
வெப்பக் காலத்தில் நீ
வீழ்ந்தாய் என்றால்
விளக்கமேதும் தேவை இல்லை...!!
வேண்டிய நேரத்தில்
வேண்டாமலே வந்தாயே.... இனி
வேறென்ன வேண்டும் என்பாரே..!!

உழுதும் முடித்து விட்டு
உரமும் இட்டு வைத்து
உயிரைக் கையில் பிடித்து
உனை நோக்கி ஏங்கும் போது
உடனே நீ வந்தாயென்றால்
உள்ளமெல்லாம் உவகை அன்றோ..!!

பூத்திருந்த பூவெல்லாம் நீ
தீண்டிச் சென்ற வெட்கத்தில்..
பூமியின் வெட்கை தனை
போக்கும் பொருட்டாய்
புதிதாய் விழ வந்து
புரட்சி தான் செய்வாயோ..!!

காதலர்கள் கூடும் இன்பக்
காரிருள் வேளையிலே
கருத்தாய் நீ வந்தாயென்றால்
கட்டியணைத்த வண்ணம் உனைக்
கண்கொட்டாமல் கண்டு களிப்பாரே..!!

அளவாய் நீ வந்தால்
அழகாய் பூக்கும் பூக்கள்....
ஆக்ரோஷம் நீ கொண்டால்
அழிந்தே போவதேனோ..!!

நிஜமாய் உனை நினைக்கும் போது
நெஞ்சில் சுகமாய் ஒரு ஸ்பரிசம்...
மழை வளமாய் மண்ணில் பெய்தால்
மாந்தர் தம் மனமும் சுகம் பெறுமே..!!

.....அன்புடன் ஆனந்தி

Wednesday, October 13, 2010

அமெரிக்க வாழ்க்கை ....பாகம் 4

அப்புறம் அடுத்து முக்கியமா சொல்ல விரும்பும் விஷயம்.. இங்க உள்ள ஸ்கூல்ஸ். எலிமெண்டரி லெவல் வரைக்கும் ஓரளவு குழந்தைகளை கஷ்டப் படுத்தாத பாடத் திட்டமாகத் தான் இருக்கும்.. இங்கே பள்ளி நேரம்... எலிமெண்டரி ஸ்கூல்க்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையில்.. ஸ்கூல்ல இருந்து குறிப்பிட்ட தொலைவில், நம்ம வீடு இருந்தால், ஸ்கூல் பஸ் வரும்.... இங்கே பள்ளிகளில், வாலண்டீரிங் (volunteering ) வொர்க் இருக்கும்.. அதாவது, பெற்றோர் தங்களால் முடிந்த நேரத்தில் அந்த வகுப்பிற்கோ, அல்லது பள்ளிக்கோ உதவி செய்றது. நான் கடந்த 3 வருஷமா என் குட்டீஸ் ஸ்கூல்-ல லைப்ரரி, மற்றும் வகுப்பில் ஹெல்ப் பண்றேன்....



இதுல என்ன வசதின்னா.. வகுப்பில் என்னென்ன நடக்கிறதுன்னு நாமும் தெரிஞ்சிக்கலாம். நம்ம குழந்தைக்கும் நம்ம உதவி செய்றதுல சந்தோசமா இருக்கும். கிளாஸ் ரூம்-இல் ஹெல்ப் பண்ணும் போது, குட்டி குட்டி குழந்தைகள்.. "ஹாய்...."னு சொல்லி அன்பா "hug " பண்றது அழகா இருக்கும். அவங்களுக்கு எதாச்சும் சொல்லித் தரும் போது, ரொம்ப தீவிரமா கேள்வி கேக்கிறது சிரிப்பா வரும்.. நண்டு மாதிரி இருந்துட்டு கேக்குற கேள்வி எல்லாம்....செம காமெடியா இருக்கும்.. எப்படி தான் இப்புடி தின்க் பன்னுதுகளோன்னு.." இருக்கும். ஒரு குழந்தை .. என்கிட்டே.. "யூ ஆர் லுக்கிங் லைக் அபி..!" அப்படின்னு சொல்லுச்சு. (ஆமாம்மா.. நா தான் என் மக மாதிரியே இருக்கேன்..னு சொன்னேன்..) அதை மழலையில் கேட்பதற்கு அழகா இருக்கும். அதிலும் சில குட்டீஸ்.. "ஹாய் மாம்..." னு சொல்லும் பாருங்க.. அப்போ அடுத்த குட்டி, "ஷி இஸ் நாட் யுவர் மாம்...., ஷி இஸ் காயூ'ஸ் மாம்..." னு விளக்கம் சொல்லும். நல்லா இருக்குங்க அந்த பீல்.


ஸ்கூல் பஸ்-இல் டிரைவர், சின்ன பசங்களை முன் வரிசையில் உக்கார வச்சு, வீட்டில் விடும் போதும், பாரன்ட்ஸ் பஸ்-ஸ்டாப்பில் இருந்தா மட்டும் தான் இறக்கி விடுவாங்க. அதே போல, இங்க பள்ளிகளில் முன் பின் தெரியாதவங்க அவ்ளோ ஈஸியா குழந்தைகளை அப்ப்ரோச் பண்ண முடியாது. யார் வந்தாலும், போனாலும் பிரான்ட் ஆபீஸ்-ல எழுதிட்டு தான் போக முடியும். இங்கே பள்ளிப் படிப்பு முழுவதும், இலவசம் தான். நாம இங்கே கட்டுகிற வரிப் பணத்தில் தான், பள்ளிகள், நூலகம், மற்றும் இதர பலவும் நடக்கிறது. அது மட்டும் இல்லாம, பாடப் புத்தகம்...அது இதுன்னு எதற்கும் பணம் வசூலிப்பதும் இல்லை. ஸ்கூல் தொடக்கத்தில் ஒரு சில பொருட்கள் கேட்பதோடு சரி.. பிக்கல், பிடுங்கல் இல்லாம இருக்கும்..



என் பொண்ணு, முதலில் ஸ்கூல் தொடங்கி கொஞ்ச நாளா வீட்டுக்கு வரும் போது, பஸ்ல இருந்து இறங்கினதும், என் கிட்ட ஒரு பேப்பர் குடுப்பா... என்னன்னு பாத்தா.. ரெண்டு பொம்மை வரைஞ்சு அம்மா, காயு அப்படி எழுதி இருப்பா.. ஒரு ஹார்ட் படம் போட்டு, ஐ லவ் அம்மா-ன்னு எழுதி இருப்பா.. எனக்கு அத பாத்ததும், ரெம்ம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கும்.. கொஞ்சம் நாள் ஸ்கூல் பழகினதும், திரும்பவும் அதே போல பேப்பர் வரும்.. ஆனா இந்த முறையும் அதுல ரெண்டு பொம்மை இருக்கும், அதே ஹார்ட் படம்..... அதே ஐ லவ் ........... ஆனாஆஆஅ அம்மாக்கு, பதில் மிஸ். மெல்செர்ட்-னு இருக்கும்.. அதாங்க என் பொண்ணோட டீச்சர்.. ஹ்ம்ம்.. சரி ஏதோ, ஒண்ணு மண்ணா இருந்து ஒழுங்கா படிச்சா சரிதான்.. என்ன சொல்றீங்க??

இங்கே பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது என்பதே கிடையாது.. இவ்ளோ ஏன்?? பெத்த நாமளே அவங்கள அடிச்சோம்னு வெளில தெரிஞ்சா ப்ராப்ளம் தான். இங்க 911 னு ஒரு நம்பர் ஒண்ண, இந்த புள்ளைங்க கிட்ட சொல்லிகுடுத்துர்றாங்க.. (நாம ரொம்ப அலெர்ட்டா இருக்க வேண்டியதா இருக்கு ) எப்போ வேணுமானாலும், பிரச்சனை  என்றால் உடனே அந்த நம்பருக்கு போன் செய்யலாம்... வெளியில் பார்க்கும் சின்ன குழந்தைகளை... நம் இஷ்டத்திற்கு எல்லாம் தொட்டு, கொஞ்சுவதோ பேசுவதோ கூடாது.. ஒரு வகையில் இந்த கட்டுப்பாடு, ரொம்பவும்  அவசியமான ஒண்ணுன்னு தான் எனக்கு தோணுதுங்க.. முன்னப்பின்ன தெரியாதவங்க குழந்தைகளை நெருங்க முடியாது பாருங்க.. 

அப்புறம், கிளாஸ்-ல "ரூம் மாம்" னு ஒரு கான்செப்ட் இருக்கு. (அப்ப்டின்னா... ரூம்ல  இருக்கற எல்லாருக்கும் மாம்-ஆ ன்னு தத்துப்பித்துன்னு கேக்க கூடாது)  அது என்னன்னு கேட்டீங்கன்னா.. (ஹலோ.. யாராவது கேளுங்களேன்....) பள்ளித் தொடக்கத்தில் யாராச்சும் ஒரு பேரண்ட் "ரூம் மாம்" ஆக நியமிக்கப்படுவாங்க. போன வருஷம், நா தான் ரூம் மாம்-ஆக இருந்தேன்.. எப்படி ஆனேன்ன்னு அந்த சோக கதையை நீங்க தயவு செஞ்சு கேட்டாகணும்.... அதாகப்பட்டது, என் மகளின் வகுப்பில், பள்ளி தொடங்கியும் யாரும் ரூம் மாம்-ஆக வாலண்டீர் பண்ணலன்னு அவளோட  டீச்சர் சொன்னாங்க.. உடனே நம்ம தான் இருக்கமே... உங்களுக்கு யாரும் முன்வரலன்னா என்னைக் கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டு வந்தேன்.. சரியா 2 நிமிஷத்திலேயே அவங்க டீச்சர் கிட்ட இருந்து ஈமெயில்... "ஹே...வி ஹாவ் அ வாலண்டியர் " னு.....!!! ஒஹ்ஹ்ஹ... ஒகே.... ஓகே.. இப்படி தான் நாமளா போயி.. தலைய குடுக்கணும்.. (ஒரு பேச்சுக்கு சொன்னா.. பய புள்ளைங்க இப்படியா சீரியஸ்-ஆ எடுத்துக்கறது)

வருஷ தொடக்கத்தில் ஒரு ஒரு குழந்தையிடமும், பார்ட்டி மணின்னு 8 டாலர் வசூல் பண்ணுவாங்க.  அந்த பணம் வைத்து தான், வருஷம் முழுசும் வர செலிப்ரேஷன் டைம்-ல கிளாஸ் ரூம்-இல் பார்ட்டி வைக்க சாப்பாடு மெனு, ஒண்ணு ரெண்டு கேம்ஸ், குட்டிஸ்கு ஒரு கிப்ட் எல்லாம் ஏற்பாடு பண்ணனும்..எல்லா பேரன்ட்ஸ்-ம் சேர்ந்து ஆளுக்கு ஒரு டிஷ் செய்து கொண்டுவந்து, பார்ட்டி அட்டென்ட் பண்றது நல்லா இருக்கும்.. (அதெல்லாம் சரி தான்...... ஆனா அந்த ஏற்பாடு பண்றது, கிப்ட் வாங்கறதுக்கு உள்ள அலைச்சல்...இதெல்லாம் கொஞ்சம் லைட்டா மண்ட காயும்... அவ்ளோ தான்.. வேற ஒன்னும் இல்லை...) இந்த படம், கிறிஸ்துமஸ் டைம்-ல நான் ஏற்பாடு செய்த மெனு..!



(.......தொடரும்)

(படம்: நன்றி கூகிள்)

Tuesday, October 5, 2010

என்னுயிர் நீயன்றோ..!!


ஆசையில் தேடி வந்தேன்
காதலால் கனிந்து நின்றேன்
உறவாய் உனை எண்ணியே
உள்ளமதில் பூட்டி வைத்தேன்...!
என் உள்ளுணர்வு உனை வெல்ல
உன் உள்ளமெங்கும் நானே என்றாய்
மன்னவனே உனைக் கண்டதும்
மாறாத என் நேசம்
மடை திறந்த வெள்ளமாய்...!
நீ மறுபேச்சு பேசாமல்
மையலுடன் எனை நோக்க
மங்கை என் மனதில்
என்னென்னவோ எண்ண அலைகள்..!
உன் கண்கள் பேசிய காதலில்
கட்டுண்டு நான் இருக்க...
எனையே பார்த்திருந்து விட்டு
இனி ஒருபோதும்
உனைப் பிரியேன் என்றாய்..!
நெற்றியில் குங்குமம் இட்டு
உன் நிழலாய் நானிருப்பேன் என்றாய்..
கண்மணியே உன்னை நான்
காலமெல்லாம் காத்திருப்பேன் என்றாய்..!
உன் காதலின் உச்சத்தில்
என் கண்களில் நீர்த் துளி..!
இனி என் உயிர் என்னைப் பிரியினும்
உன்னை நான் பிரியேனே...!

...அன்புடன் ஆனந்தி


(படம்:  நன்றி கூகிள் இமேஜஸ்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)