கண்ணிமைக்கும் நேரத்தில் காலம் கடந்து விடுகிறது... எதிர்பாராத நிகழ்வுகள் எம்மை எட்டித் தள்ளி விட்டே.. நிமிஷமும் நிற்காது... நிதானமாய் கடந்தும் சென்று விடுகின்றது... என்ன நடந்தது என்று எண்ணி இமைப்பதற்குள்.. ஏதேதோ நடந்து எம் வாழ்வு எம்மை நோக்கியே.. என்ன என்று கேட்கிறது.
உறைந்து விட்ட கண்ணீர்.. உயிர் வலியை உணர்த்தும் தருணம். நிலையாமை தத்துவம்.. நிதர்சனத்தில் உணர்ந்தாலும்.. நிச்சயத்தில் உணரும் போது.. நிலைகுலைந்து விடத்தான் நேர்ந்து விடுகிறது. கரை தேடும் அலைகள் போல்.. காலம் முழுவதும் எதையோ தேடிய வண்ணம் எம் வாழ்வு.. இருக்கும் இடத்திலும் நமக்கென்று சாச்வதமாய் ஸ்தலம் இல்லை.. உருவான இடத்திலும்.. உட்கார்ந்து ஆசுவாசப்படுத்த உரிமையும் இல்லை.
எந்த இடத்தில் எம் நிலை?? தொலைந்து போன உறவுகள்.. மறந்து போன கனவுகள்.. மரித்தே போன உணர்வுகள்... எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலையில் இன்று.. இருக்கிறது ஆனால் இல்லை... எது நிலையானது... எது எமக்கென்று இருப்பது... எது சத்தியம்...?? எல்லாம் அறிந்தும் அறியாதது போல் மாயை கண் மறைக்க... மறுபடியும் முதலில் இருந்து மூச்சு இறைக்க ஓட தயாராகி விட்டானது.
எண்ணற்ற சிந்தனைகள்.. எதிரில் தாண்டவமாட.. எதிலும் நிலைக்காது... நிலையான சத்தியம் தேடி.. நிற்காது தொடரும் எம் பயணம்... கருவறைக்குள் கடுகளவும் பயமின்றி கச்சிதமாய் வாழ்ந்த நேரம்.. கடவுள் நமக்களித்த ஆசுவாசப் படுத்திக்கொள்ளும் நேரம்.. ஓட்டத்திற்கு முன்பு உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்.. வெளியே வந்து விட்டால்.. விடாது கறுப்பு.. என்பது போல... வெறித்தனமாய் ஓட வேண்டி இருக்கும் என்றோ...?!
மௌனிக்கும் தருணம் இது..... மனதிற்கு அமைதி வேண்டும்.. உடலின் சோர்வு.. உள்ளத்தின் அயர்ச்சி.. உயிர் வரை சென்று உழல செய்யாதிருக்க... மௌனித்து விடு மனமே.. அமைதி கொள்.. அடக்கமாய் இரு.. சவமாய் இரு... சர்வமும் சிவமே என்றிரு... சத்தியம் அதுவென்றிரு..!
எதுவும் நிரந்தரம் இல்லை... எல்லாமுமாய் உன்னை வரித்துக் கொண்டு... ஏமாந்து போகாதே... ஏதும் நீ இல்லை... நீ என்ற ஒன்றே இல்லை... உண்மைகள் உணர்ந்திருந்தால் உள்ளத்தில் அமைதி கொள்... நிகழும் எல்லாமே நியாயமில்லை... மாதவம் செய்தால் கூட மாண்டார் மீள்வதில்லை... கடமைகளில் கட்டுண்டு.. கரை காண தவிக்கிறாய்...! காலமே அதற்கு மருந்து... இறைவன் கணக்கு என்றும் தப்பியதில்லை... எல்லாம் அவன் விருப்பப்படி இனிதே நடக்கிறது..
வேடிக்கை பார்த்து கொண்டிரு.. விதண்டாவாதம் விட்டு விடு.. உணர்வின் தாக்கத்தில்.. உள்ளத்தின் ஏக்கத்தில் உண்மை உணர்ந்து விடு.. வலிகள் உணரப் பட வேண்டும்.. வாழ்க்கை அறியப் பட வேண்டும். எல்லைகள் உடைக்கப் பட வேண்டும்.. எங்கும் ஏகாந்தம் நிறைக்கப்பட வேண்டும். இறையின் வழி சென்று குறை களைய முயற்சி செய்.. எந்த அடையாளமும் இல்லா இவ்வுடல் விடுத்து.. இறைவனடி சேரும் நேரத்திற்காய் ஏக்கத்தோடு காத்திரு..!
...அன்புடன் ஆனந்தி
படம்: கூகிள், நன்றி
2 comments:
வேடிக்கை பார்த்து கொண்டிரு.. விதண்டாவாதம் விட்டு விடு.. உணர்வின் தாக்கத்தில்.. உள்ளத்தின் ஏக்கத்தில் உண்மை உணர்ந்து விடு.. வலிகள் உணரப் பட வேண்டும்.. வாழ்க்கை அறியப் பட வேண்டும்.
நல்ல பகிர்வு சகோதரி.
ஓட்டத்திற்கு முன்பு உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்.. வெளியே வந்து விட்டால்.. விடாது கறுப்பு.. என்பது போல... வெறித்தனமாய் ஓட வேண்டி இருக்கும் என்றோ...?!
நிதர்சனமான வரிகள் சகோதரி! :-)
Post a Comment