சூரரரைப் போற்று - மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள் - நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்
தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன் முதலில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆத்திசூடி எழுதினார். ஒளவையாரைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி எழுதியுள்ளார். ஒளவையார் எழுதியது 109. பாரதியார் எழுதியது 110.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஆந்திரா மாநிலத்தில் டாக்டர் கோபி என்பவர் நானிலு என்னும் நான்கு வரிக்கவிதையை அறிமுகப்படுத்தினார். நானிலுவை தன்முனைக்கவிதைகள் என கவிஞர் கா. ந கல்யாண சுந்தரம் இறக்குமதி செய்தார்.
மகாகவி பாரதியாரின் ஆத்திசூடியின் கருத்தைக் கொண்டு தன்முனைக் கவிதைகளில் தனித்து விளங்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி 110 தன்முனைக் கவிதைகள் எழுதித் தந்திருக்கும் தொகுப்பு சூரரரைப் போற்று. தன்முனை நாயகர் கா. ந. கல்யாணசுந்தரம் அவர்களுக்கே தொகுப்பை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அச்சம் தவிர் என்னும் முதல் ஆத்திசூடிக்கு எழுதிய தன்முனை
எதைக் கண்டும் அஞ்சாது
எதிர் நீச்சல் போடுவோம்
எதிர்வரும் துன்பத்தை
அச்சமின்றித் தடுப்போம்
வாழ்வில் எது வந்தாலும் எது நிகழ்ந்தாலும் அச்சம் என்பது சிறிதுமின்றி துணிந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அச்சமே பலரை முன்னேறாமல் தடுக்கிறது என்பதை உணர்த்தியுள்ளார். உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் அச்சம் என்பது இல்லையே என்னும் பாரதியின் வரியே நினைவிற்கு வருகிறது.
ஓய்வு என்பது ஒருவகையான சோம்பேறித்தனம். ஓய்வின்றி உழைப்பவரே உயர முடியும். ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்று பாடியவரும் பாரதியாரே. அவரே ஆத்திசூடியில் ஒற்றைச் சொல்லில் ஓய்தலொழி என்று வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தை வலியுறுத்தும் விதமாக கவிஞர் எழுதிய தன்முனை
சோம்பித் திரிந்தவர்கள்
என்றும் வெல்வதில்லை
ஓயாமல் உழைப்பவர்க்கே
உறுதியாய் வெற்றியாம்
சோம்பேறித்தனமாக இருக்கும் மனிதர்களுக்கு வெற்றி வெகுதூரமே என்கிறார். ஓயாமல் உழைப்பவர்களே வெற்றிப் பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.
கல்வி கற்பது என்பது வேறு. கைத்தொழில் கற்பது என்பது வேறு. கல்வி கை விட்டாலும் கைத்தொழில் கைவிடாது. கைத்தொழில் மனிதரைக் காப்பாற்றும்.
கைத்தொழில் ஒன்றேனும்
கற்றுக் கொள்வோம்
காலமெல்லாம் நமக்குக்
காவலாய் நிற்கும்
எனக் கவிஞரும் கைத்தொழில் கற்றுக்கொண்டால் காலமெல்லாம் காவலாய் இருக்கும் என்கிறார். கல்விக்கு ஏற்ப எவரேனும் வேலை கொடுத்தால் உண்டு. கைத்தொழில் கற்றவனுக்கு வேலை தேடும் வேலை இருக்காது. இத் தன்முனைக்கான ஆத்திச்சூடி கைத்தொழில் போற்று.
ஒரு செயலைத் தொடங்கும் முன் துணிவுடன் தொடங்க வேண்டும். துணிவுடன் தொடங்குவது வெற்றிக்கு வழிவகுக்கும். நீச்சல் கற்றுக் கொள்பவனுக்கு துணிவு மிக முக்கியம். மகாகவியும் செய்வது துணிந்து செய் என்றார்.
கவிஞரும்
செய்யும் செயலைத்
துணிந்து செய்க
எதற்கும் அஞ்சாது
தொடர்ந்து வெல்க
என்று ஆத்திசூடியின் கருத்தை தன்முனையில் முன்மொழிந்துள்ளார். துணிந்தவனுக்கு துணிவே துணையாகும் என்பதையும் நினைவுப்படுத்துகிறது.
ஞேயங் காத்தல் செய் என்பது அன்பைக் காப்பாற்று என்பதாகும். அன்பு என்பது மனிதர்க்கு அவசியம். அன்பின்றி அமையாது வாழ்வு. அன்பைக் காத்தல் மட்டுமின்றி அன்பை பரிமாறவும் வேண்டும்.
சக உயிர்களிடம்
கருணை கொள்
நேயம் காத்து
நேசிப்பால் வெல்
எனக் கவிஞரும் நேயம் கொள்வதுடன் காத்துக் கொள்ளவும் வேண்டும் என்கிறார். நேசிப்பால் வெல் என கூடுதலாகவும் கூறியுள்ளார்.
தையல் சொற் கேளேல் என்றார் ஒளவையார். ஆனால் தையலை உயர்வு செய் என்கிறார்.
பெண் உயர்ந்தால்
சமூகம் உயரும்
மாதரைப் போற்றிட
நானிலம் மலரும்
என்னும் தன்முனை மூலம் பாரதியை விட ஒரு படி உயர்ந்து பெண் உயர்ந்தாலே சமூகம் உயரும் என்கிறார். மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாரதியாரே பாடியுள்ளார். பெண்ணை சமூகம் போற்ற வேண்டும். பெண்ணை போற்றும் சமூகமே முன்னேறிய சமூகமாகும்.
நேர் படப்பேசுதல் நல்லது. மனிதர்க்கும் நல்லது. நேர் படப்பேசியவர்கள் நெஞ்சை நிமிர்ந்து வாழலாம். நேர் படப் பேசுபவர்களையே மற்றவர்களுக்கு பிடிக்கும். பாரதியார் நேர் படப்பேசு என்று கூறியதை முன்வைத்து
உள்ளதை உள்ளபடி
நேர்மையாய்ப் பேசு
கள்ளம் கபடமின்றி
கருத்தாய்ப் பேசு
என்று நேர் படப்பேசியுள்ளார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் கூடாது என்கிறார்.
வாழ்வில் இலக்கினைப்
பெரிதாய்க் கொள்க
உயர்ந்த எண்ணங்களை
இலட்சியம் ஆக்குக
என்னும் தன்முனைக்கான ஆத்திசூடி பெரிதினும் பெரிது கேள். உயர்ந்த சிந்தனையை உடையவராய் மனிதர் இருக்க வேண்டும். பெரிதான இலக்கைக் கொண்டிருந்தாலே சிறியதாக ஏதேனும் அடையமுடியும். பணம் கேட்பவரிடத்தும் அதிகமாக கேட்டாலே குறைந்த அளவாவது கிடைக்கும். கவிஞரும் பாரதி கூறியது போல் இலட்சியத்தையும பெரிதாகக் கொள் என்கிறார்.
மெல்லத் தெரிந்து சொல் என்பது மெதுவாக தெரிந்து சொல் என்பதாகும். அதாவது அவசரப்பட்டு சொல்லாதே என்று பொருள்படும். கவிஞர்
முழுமையாக அறிந்து
எதையும் பேசு
புரிந்து உணர்ந்ததை
பக்குவமாய்ப் பேசு
என்கிறார். ஒன்றை பேசுவதற்கு முன் அது குறித்து முழுமையாக தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டிய இடத்தில் பக்குவமாக பேசுவது சிறந்தது என்று பேசியுள்ளார்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். குறள்: 388
இறையென்று வைக்கப் படும். குறள்: 388
என்றார் வள்ளுவர். நீதி குறித்து நிறைய நீதி நூல்களும் உண்டு. பாரதியார் நீதி தவறேல் என்று நேரடியாகவே கூறியுள்ளார்.
நெறிமுறைகள் தவறாது
ஒழுங்குடன் வாழ்ந்திடு
அத்து மீறினால்
ஆபத்தென உணர்ந்திடு
என்று கவிஞர் தன்முனையில் பாடியுள்ளார். நீதி தவறாமல் வாழ்வதை விட நீதி தவறினால் ஆபத்து என்றும் எச்சரித்துள்ளார். நீதி தவறாதவர்களை நாட்டில் காண்பது அரிதாகிவிட்டது. நீதி மன்றங்களில் கூட நீதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உலோகம் பயன்பாட்டிற்கு வந்து காலங்கள் பல ஆகின்றன. உலோகம் மனித வாழ்வில் தேவைப்படும் ஒரு பொருள். உலோகத்தின் உபயோகம் அவசியம். உலோகத்தை உணர்ந்த பாரதியார் (உ)லோக நூல் கற்றுணர் என்று ஆத்திச்சூடியில் அறிவுரைத்துள்ளார்.
உலோகத்தின் பயன்பாடு
உணர்ந்து அறிந்து கொள்
உலக வளர்ச்சிக்கு
உதவிடக் கற்றுக் கொள்
என்று ஆத்திசூடியை உணர்ந்து உலோகத்தின் பயன்பாட்டை உணர்ந்து அறிந்து கொள் என்பதுடன் உலக வளர்ச்சிக்கு உதவிடவும் வேண்டும் என்கிறார்.
வெளவுதல் நீக்கு என்பது இறுதி ஆத்திசூடி ஆகும். வெளவுதல் என்றால் கைப்பற்றுதல். வெளவுதல் நீக்கு என்றால் கைப்பற்றுதலை கைவிடு.
பிறர் பொருளை
அபகரிக்க எண்ணாதே
உரிமை இல்லாதவற்றை
எடுக்க நினைக்காதே
என கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தியும் அடுத்தவர்க்கு உரிமையானதை அபகரிக்க எண்ணுதல் தவறு என்று எச்சரித்துள்ளார்.
பொதுவாகவே தன்முனைக் கவிதைகளில் ஒரு செய்தி இருக்கும். ஒரு கருத்து இருக்கும். ஓர் அறிவுரை இருக்கும். மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடியில் அறிவுரைத்த 110 அறிவுரைகளைக் கொண்டு 110 தன்முனைக் கவிதைகளை எழுதியுள்ளார். ஆத்திசூடியின் சாராம்சத்தை முழுமையாக உள்வாங்கி சாராம்சம் மாறாமல் தன்முனையாக்கித் தந்துள்ளார். ஒவ்வொரு தன் முனையும் ஆத்திசூடிக்கான கவிதை வடிவத்திலான தெளிவுரைப் போலிருந்தது. ஆத்திசூடி ஆனந்திச் சூடியாகி உள்ளது. மகா கவி பாரதி மீதான மதிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் எழுதிய பாரதியின் ஆத்திசூடியை இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களுக்குக் கொண்டு சென்றுள்ளார். தன்முனைக் கவிதைகளையும் தந்துள்ளார். தன்முனைக் கவிதைகளுக்கு தலைப்பிருக்காது. கவிஞர் ஆத்திசூடியையே தலைப்பாக வைத்துள்ளார். தன்முனைக் கவிதைகள் எழுதுவதில் தனி முனைப்புடன் இயங்கும் நெல்லை அன்புடன் ஆனந்தியின் பயணம் தொடர வாழ்த்துகள்.
வெளியீடு:
நூலேணி பதிப்பகம், சென்னை
98412 36965
கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி
கவிஞர் விமர்சகர் பொன். குமார்
9003344742