skip to main |
skip to sidebar

மரமாய் நானிருக்க
மழையாய் நீயிருப்பாய்
வேராய் நான் இருக்க
விழுதாய் நீயிருப்பாய்
வான்முகிலாய் நானிருக்க
வெண்ணிலவாய் நீயிருப்பாய்
கரையாய் நானிருக்க
அலையாய் நீயிருப்பாய்
தொடு வானமாய் நானிருக்க
அதில் படும் மேகமாய் நீயிருப்பாய்
வானவில்லாய் நானிருக்க
வண்ண மயிலாய் நீயிருப்பாய்
அன்பாய் நானிருக்க
அனலாய் நீ தகிப்பாய்
விதையாய் நானிருக்க
விருட்சமாய் நீயிருப்பாய்
மலராய் நானிருக்க
வண்டாய் நீயிருப்பாய்
வாழ்வாய் நானிருக்க
அதில் வசந்தமாய் நீயிருப்பாய்
தவமாய் நானிருக்க
வரமாய் நீயிருப்பாய்
கண்மூடி நானிருக்க
கரம் கோர்த்து நீயிருப்பாய்
வெளிச்சமாய் நானிருக்க
வெயிலாய் நீயிருப்பாய்
கரு விழியாய் நானிருக்க
கண்ணிமையாய் நீயிருப்பாய்..!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)

முகத்தில் இனி விழிக்காதே என்று
முத்தாய்ப்பாய் சொல்லிச் சென்றாள்
மெய் மறந்து நின்றிருந்தேன்
மெய்தானா என்றிருந்தேன்...
பேசாமல் தினம் எப்படி கழிப்பது
பேசியவற்றை எவ்வாறு அழிப்பது?!
சுந்தரமாய் தெரிந்த உலகம்
இன்று ஒன்றுமில்லா சூனியமாய்...
கால் போன போக்கில்
நடந்து சென்றேன்..
காலம் கடந்த உணர்வில்
கலங்கி நின்றேன்..
வானம் இருள் சூழக் கண்டேன்
எனக்காய் மருண்டதாய் கொண்டேன்..
எண்ணற்ற விசயங்கள்
எனக்குள் எதிர் நீச்சல் போடக் கண்டேன்..
ஒற்றை சொல்லால் மயங்கச் செய்வாள்
கற்றை குழலில் கிறங்கச் செய்வாள்
வெறும் பார்வையில் வேதங்கள் சொல்வாள்
சிறு மனக்கசப்பில் பேதங்கள் கொள்வாள்..
சிறு பிள்ளையாய் பேசிச் சிரிப்பாள்
பெரும் ஞானி போல் கருத்து சொல்வாள்
ஒன்றுமில்லா விசயத்திற்கு
ஒரு மணி நேரம் வாதம் செய்வாள்..
கள்ளப் பார்வையில் காதல் சொல்வாள்
கைகளில் பாவையாய் கண்மூடிக் கிடப்பாள்..
பொய்க் கோபம் கொண்டு
பொருந்தா குணமாய் வாய் மூடி இருப்பாள்..
இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்
எண்ணியவாறே வீடு வந்து சேர்ந்தேன்..
அவள் இல்லாத வீடு
எனக்குள் அச்சத்தை அளித்தது..
நினைவுகள் நிழலாய் எனை
நீங்காமல் தொடர்ந்து வர
உறக்கம் எனக்கு எதிரியாய்
உயிர்ப்பாய் சத்யாகிரகம் செய்ய..
அசதியில் படுத்துக் கொண்டேன்
ஆழ்ந்து உறங்கி விட்டால் எல்லாம்
வீண் கனவாய் போய்விடாதா
விளக்கணைத்தேன் விடையின்றி..!!
~அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)
மூடிய இமைகளில்
சத்தமின்றி முத்தமிடும்...
முழு நிலவாய் முன் தோன்றி
முகமன் இன்றி கைப்பற்றும்..
எத்தனையோ பேர் இருப்பினும்
தன்னுயிர் தடம் பார்த்து
தடையின்றி நடை போடும்..
நிஜங்களை நினைத்து வாழும்
நிகழ்தலில் நெஞ்சம் ஏங்கும்
கொஞ்சும் சிரிப்பில்
குழந்தையை மிஞ்சும்
வெகுண்டு எழும் நேரத்தில்
எரிமலையாய் சிதறும்..
அன்பினை அமுதாய் ஊட்டும்
அவ்வப்போது நம்மை வீழ்த்தும்
எளிதில் எதையும் ஒத்துக்கொள்ளாது
எதிரில் நின்று பித்துக்கொள்ள செய்யும்
ஆத்திரம் கண் மறைப்பின்
அன்பினால் கண் திறக்கும்
தொடுவானமாய் நீண்டு செல்லும்
நீங்காமல் நெஞ்சில் வீசும்..
வானவில்லின் வண்ணம் காட்டும்
வகை வகையாய் எண்ணம் மீட்டும்
நினைவுகளால் நெகிழச் செய்யும்
நேரில் கண்டால் மௌனமாகும்
கண்டதை எண்ணி கலங்கி நிற்கும்
கைகளுக்குள் குழந்தையாய்
கண் மூடிக் கிடக்கும்..
பிடிவாதமாக சண்டையிடும்
பிடித்து வைத்து பிரியம் பேசும்
சலனமில்லா சகாப்தம் காணும்
சப்தமும் அடக்கி ஆளும்..!!!
...அன்புடன் ஆனந்தி